குருந்தூர் மலையில் இராணுவ ஏற்பாட்டில் சிவன் ஆலயம்!

 


குருந்தூர் மலையில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரையினை இடித்தகற்ற நீதிமன்று கட்டளையிடுமென்ற சூழலில் அங்கு சிவன் கோவில் கட்டுவது என்ற தீர்மானத்தை இந்து - பௌத்த மதத்தலைவர்கள் என கூறிக்கொள்ளும் சிலர் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - ஆரியகுளம் நாக விகாரையில் பௌத்த பிக்குகள் மற்றும் சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், சைவக் குருமார்களும் இன்று வியாழக்கிழமை (17) கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

காலை 10 மணிக்கு ஆரம்பமான இக்கலந்துரையாடல் சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் இடம்பெற்றது.

கலந்துரையாடலின் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த-கோத்தபாய ஆதரவு தரப்பினை சேர்ந்த மத நல்லிணக்க தரப்புக்கள் சில செயற்பட்டிருந்தன.

இத்தரப்புக்கள் இலங்கை இராணுவ தலைமையக கட்டளை பீடத்துடன் நெருங்கிய உறவையும் பேணிவருவதாக உள்ளுர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஈழம் சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலோ சச்சிதானந்தன்  குருந்தூர் மலையில் சிவன் கோவில் கட்டுவது என இந்து - பௌத்த அமைப்புக்கள் இணைந்து தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

சிவன் கோயிலை மீள கட்டுவதன் மூலம் பௌத்தவிகாரையை இடிப்பதற்கான கட்டளையினை நீர்த்துப்போகச்செய்ய முயல்வதாக தெரியவருகின்றது.

No comments