விபத்துக்களில் சிக்கி நாளொன்றுக்கு 120 பேர் யாழ்.போதனாவில் அனுமதிக்கப்படுகின்றனர்
விபத்துக்களில் சிக்கி நாளொன்று 120 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதாக , யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நாளொன்றுக்கு சராசரியாக 120 பேர் விபத்து பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். நேரடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களும் , வேறு வைத்தியசாலைகளில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களும் இதில் உள்ளடங்குகின்றனர்.
இவ்வாறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களில் சுமார் 10 பேர் என்பு முறிவுகளுடன் அனுமதிக்கப்படுகின்றனர். சிறிய முறிவுக்கு உடனடியாக சிகிச்சை வழங்க முடிகிறது.
பெரும்பான்மையான என்பு முறிவுக்கு சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. அவற்றின் போது சிலருக்கு தகடு வைக்க வேண்டிய தேவையும் உள்ளது.
இவ்வாறான பெரியளவிலான சத்திர சிகிச்சைக்காக சுமார் 4 மாத கால பகுதிக்கு மேல் காத்திருக்க வேண்டும். இவற்றுக்கு சுமார் 10 இலட்ச ரூபாய்க்கு மேல் செலவாகின்றது. அதேவேளை சில மருந்துகளுக்கு தட்டுப்பாடும் நிலவுகின்றது.
எனவே விபத்துக்களில் சிக்காது அவதானமாக இருக்க வேண்டும். குறிப்பாக இளையோர் மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் அதிகம் சிக்குகின்றனர். அவதானமாக மோட்டார் சைக்கிள் செலுத்த வேண்டும்.
அதேவேளை மன அழுத்தங்கள் , வாகனத்தில் பயணிக்கும் போது சிந்தனைகளை தவிர விடுதல் , வேறு சிந்தனைகளுடன் பயணித்தால் போன்றவற்றாலும் விபத்துக்கள் அதிகம் நடைபெறுகின்றன.
எனவே அனைவரும் விபத்துக்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்
Post a Comment