பதின்மூன்றாவது அரசியல் திருத்தம் நித்திய கண்டம், ஆயுசு நூறு!n பனங்காட்டான்


இப்போதிருக்கும் அதிகாரப் பகிர்வு விடயங்களை இடைக்காலத் தீர்வாக அமல்படுத்தாது போனால், கிடைப்பதும் இல்லாது போகுமென்று கடந்த ஜனவரி மாதம் 20ம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கொழும்பில் சம்பந்தன் உட்பட தமிழர் தரப்பினர் அனைவரையும் ஒன்றாக அழைத்துக் கூறியதை இவர்கள் நினைவிற் கொள்வார்களானால் இப்போதைய கடிதப் போட்டி தேவைப்படாது என்பதை புரிந்து கொள்வார்கள்.

ஜெனிவா அமர்வுக் காலங்களில் இலங்கைத் தமிழர் விவகாரம் சூடு பிடிப்பது போன்று, இலங்கை - இந்திய தரப்புகள் சந்திக்கும் வேளைகளில் தமிழருக்கான அதிகாரப் பகிர்வு, இனப்பிரச்சனைத் தீர்வு என்ற விடயங்கள் தீவிர பேசுபொருளாகும். 

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வாரம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை புதுடில்லியில் சந்திக்கவுள்ளார். அப்போது மோடி அவருக்கு என்ன சொல்ல வேண்டும் என்ற பாணியில் கடிதப் போட்டி நடத்தும் தமிழர் தலைமைகள் தங்களுக்குள் முட்டி மோதிக்கொண்டிருக்கின்றன. 

1987 யூலையில் செய்யப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தம் இந்த மாத இறுதியில் 36 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்தக் காலப்பகுதியில் ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதன் அர்த்தம், சிங்கள தேசம் தமிழரை எவ்வாறு எத்தி விளையாடியிருக்கிறது என்பதை புரிய  வைப்பது. 

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படை அம்சமான மாகாண சபைகள் அமைப்பு என்பது இலங்கை அரசியல் அமைப்பின் 13வது திருத்தமாக அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டு வரப்பட்டது. பிரிவினைக்கு இடமில்லாத ஒற்றை ஆட்சியை வலியுறுத்தும் ஆறாவது அரசியல் திருத்தம் போன்றதே அதிகாரப் பகிர்வுக்கான 13வது அரசியல் திருத்தமும். அதாவது, இவை இரண்டும் சட்ட வலுவுள்ளவை. பண்டா - செல்வா, டட்லி - செல்வா ஒப்பந்தங்கள் போன்று ஒருதலைப்பட்சமாக எவரும் கிழித்தெறியக்கூடிய ஒன்றல்ல 13வது திருத்தம். 

கடந்த 36 ஆண்டுகளில் எட்;டு ஜனாதிபதிகள் நிறைவேற்று அதிகாரங்களுடன் ஆட்சி புரிந்துள்ளனர். ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும், சந்திரிக குமாரதுங்கவும், மகிந்த ராஜபக்சவும் இவ்விரண்டு தடவைகள் தொடர்ச்சியாக பதவி வகித்துள்ளனர். ஆனால் எவருமே 13வது அரசியல் திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றத் தயாராக இருக்கவில்லை. இதில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அடக்கம். 

இந்த ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொள்ளவில்லையாயினும் இந்திய வல்லரசுக்கெதிராக எதுவுமே செய்ய முடியாத சூழ்நிலையால் தற்காலிகமாக ஏற்றுக்கொள்ள நேர்ந்தது. காணி, காவற்துறை அதிகாரங்களுடன் மாகாண சபைகளை அமைப்பதற்கு முன்னர் இடைக்கால நிர்வாகமொன்றை அமைக்க விடுதலைப் புலிகள் இணங்கினராயினும், முதற்கோணல் முற்றுங்கோணல் என்பது போல அதில் ஏமாற்றமே கிடைத்தது. 36 வருடங்களாக அதிகாரப் பகிர்வு என்பது அர்த்தமற்ற ஒன்றாக இருந்து வருகிறது. 

வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாண சபை என்பது 1990 மார்ச் மாத இறுதியுடன் காலாவதியானது. அத்துடன், இணைந்த மாகாண சபை என்பது நிர்மூலமாயிற்று. அதன் பின்னர் கிழக்கு மாகாண சபை பல வருடங்களாக இயங்கியதாயினும் வடமாகாண சபை ஐந்து வருடங்களுக்கே இயங்க விடப்பட்டது. 

அதிகாரமற்ற மாகாண சபை முறைமை அர்த்தமற்ற ஒன்றாக காணப்பட்டதாயினும் இதற்கான தேர்தலில் போட்டியிடுவதிலும் ஆட்சியைக் கைப்பற்றுவதிலும் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முழு மூச்சுடன் இறங்கி வெற்றி கண்டது. கொழும்பிலிருந்து நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை இறக்குமதி செய்து வடமாகாண சபையின் தலைவராக்கியதும் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்புதான். 

இணைக்கப்படாத (அல்லது பிரிக்கப்பட்ட) கிழக்கு மாகாண சபை தேர்தலை 2008ல் புறக்கணித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, 2012ல் அங்கு போட்டியிட்டு தனது கொள்கையை தானே தீயிட்டுக் கொளுத்தியது. இதன் பின்னர் எல்லாமே திக்குத் திசையின்றி மாறி மாறி ஓட்டம் கண்டன. 

இன்றுள்ள நிலை என்ன? கூட்டமைப்பின் பேச்சாளரென அறிமுகப்படுத்தப்பட்ட சுமந்திரனின் எதேச்சாதிகாரப் போக்கினால் தமிழரசுக் கட்சி கூட்டமைப்பிலிருந்து வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது. இதனால் கூட்டமைப்பிலிருந்த ரெலோவும் புளொட்டும் ஏற்கனவே கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய சுரேஷ் பிரேமச்சந்திரன், சிறீகாந்தா, சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருடன் ஜனநாயக போராளிகளையும் இணைத்துக் கொண்டு புதிதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியது. 

இந்தக் கூட்டுகளிலிருந்து விடுபட்டு தனித்தியங்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதனுடனும் இணையாது தனித் தண்டவாளத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆக, தமிழர் பிரச்சனைத் தீர்வில் மூன்று தமிழ்த் தேசிய அணிகள் தமக்கான பாதையை வகுத்து அதில் இயங்குவது தவிர்க்க முடியாததாகி விட்டது. 

ரணில் - மோடி சந்திப்புக்கு ஒரு வாரம் மட்டுமே இருக்கும் வேளையில் தமிழர் தரப்புகள் சுடுகுது மடியைப் பிடி என்னும் பாணியில் மோடிக்கு ஆலோசனைக் கடிதங்கள் அனுப்புகின்றன. சமஷ்டி முறையிலான தீர்வை ரணிலிடம் இந்தியா வலியுறுத்த வேண்டுமென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணி மோடிக்கான கடிதத்தில் கேட்டுள்ளது. 13வது அரசியல் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துமாறு ரணிலுக்கு அழுத்தம் கொடுக்கும்படி ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆறு கட்சிகளின் தலைவர்களும் ஒப்பமிட்டுக் கடிதம் அனுப்பியுள்ளனர். 

இந்தக் கடிதத்தில் ஒப்பமிட மறுத்துள்ள சம்பந்தன் தமிழரசுக் கட்சி சார்பில் தனியாக கடிதம் அனுப்பியுள்ளார். அதாவது, 13வது திருத்தத்துக்கு அப்பால், இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் கூறப்பட்டவைகளை முழுமையாக அமல் செய்ய வேண்டுமென மோடியிடம் தமிழரசு கேட்டுள்ளது. இந்தத் தனிக்கடிதத்தை அனுப்புவதற்காகத்தான் ஆறு கட்சிகளின் கூட்டுத்தயாரிப்பில் ஒப்பமிட சம்பந்தன் மறுத்துள்ளார் போலும். 

கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே சம்பந்தனை அவரது இல்லத்தில் சந்தித்தபோது தமிழரசுக் கட்சியின் கடிதம் நேடியாக ஒப்படைக்கப்பட்டது. அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுக்கு பிரதமர் மோடி ரணில் விக்கிரமசிங்கவிடம் அழுத்தம் பிரயோகிக்க வேண்டுமென்று இந்தியத் தூதுவரிடம் வேண்டியதாகவும், இதனை உடனடியாக இந்தியப் பிரதமருக்கு தெரிவிப்பதாக தூதுவர் கோபால் பாக்லே கூறியதாகவும் செய்திக் குறிப்பொன்று தெரிவிக்கிறது. 

13வது திருத்தமானது இரு நாட்டுத் தலைவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் வழியாக அரசியல் அமைப்பில் செய்யப்பட்ட திருத்தம். இன்னொரு அரசியல் திருத்தத்தின் வழியாக மட்டுமே 13ஐ ரத்துச் செய்ய முடியும். வேறெந்த வழியாலும் 13ஐ அகற்ற முடியாது. 

வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாண சபையை நிரந்தரமாக்க கிழக்கு மாகாணத்தில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட வேண்டுமென ஒப்பந்தம் கூறுகிறது. ஆனால் இலங்கை உச்ச நீதிமன்றம் அதனை சட்டபூர்வமாக ரத்துச் செய்துவிட்டது. இதனையிட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட இரு நாட்டு அரசுகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

13ம் திருத்தத்தின் கீழான மாகாண சபைகள் தனித்தனியாக அமைக்கப்பட்டபோது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சம்பந்தன் தலைiயில் அதனை ஏற்றுக் கொண்டு தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் இப்போது 13ம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென சம்பந்தன் வலியுறுத்துவது அடிப்படையில் முன்னுக்குப்பின் முரணானது. 

13ம் திருத்தம் தமிழரது இனப்பிரச்சனைக்குத் தீர்வு என எவரும் எப்போதும் ஏற்றுக்கொள்ளவில்லை. தற்காலிகமாக ஒரு இடைக்காலத் தீர்வாகவே அது நோக்கப்படுகிறது. ஏற்கனவே இதனை ஏற்று வடமாகாண சபை நிர்வாகத்தைக் கைப்பற்றிய சம்பந்தனின் தலைமை இப்போது கூட்டமைப்பிலிருந்து விலகி தமிழரசுக் கட்சியாக தனித்தியங்கும் வேளையில், ஒன்றுபட்டு இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்ப மறுப்பது, ரணில் விரும்பும் தட்டிக் கழிக்கும் செயற்பாட்டுக்கு உதவுவதாக அமையும். 

தமிழர் அரசியல் பரப்பில் மூத்த கட்சியான தமிழரசு மற்றைய ஆறு கட்சிகளின் தயாரிப்பில் ஒப்பமிடுவதை தரக்குறைவாக எண்ணியதால் சம்பந்தன் அதில் ஒப்பமிட மறுத்துவிட்டதாக பொதுவெளியில் கருதப்படுகிறது. சிவாஜிலிங்கம் அனுப்பியுள்ள கடிதம் உட்பட இதுவரை நான்கு கடிதங்கள் இந்தியப் பிரதமருக்கு தமிழ்த் தேசிய தரப்பிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது. இதில் எதனை மோடி கவனத்தில் எடுப்பார்?

இவ்வேனையில் கடந்த ஜனவரி மாதம் 20ம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கொழும்பில் சகல தமிழர் தரப்பையும் ஒன்றாக அழைத்து சந்தித்தபோது அவர்களுக்கு வழங்கிய ஆலோசனை கவனத்துக்குரியதாகிறது:

'இப்போதிருக்கும் அதிகாரப் பகிர்வு விடயங்களை இடைக்காலத் தீர்வாக அமல்படுத்தாது போனால் கிடைப்பதும் இல்லாது போகும். தீர்வைப் பற்றி பேசிக் கொண்டேயிருப்பது ஒருபோதும் தீர்வைப் பெற்றுத்தராது" என்று சம்பந்தன், கஜேந்திரகுமார், சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சிறீகாந்தா, சுரே~; பிரேமச்சந்திரன் ஆகியோருக்கு நேரடியாகவே ஜெய்சங்கர் தெரிவித்தார். 

இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதை வேறெந்த வழியாக தெரிவித்தால் தமிழர் தரப்புக்குப் புரியும். இந்தப் புரிதல் இன்மையால்தான் வெவ்வேறு கோணங்களில் இவர்கள் கடிதப்போட்டி நடத்துகிறார்கள். இந்தியா என்ன சொல்லும் என்பதும், இலங்கை என்ன செய்யும் என்பதும் ரகசியமானவை அல்ல. 

13வது அரசியல் திருத்தம் நித்திய கண்டம் போன்றது. ஆனால் இதற்கு ஆயுள் நூறு. இதனை தமிழர் தரப்பினர் எப்போது புரிந்து கொள்வர்?

No comments