ரணிலின் 13:வடமராட்சி கிழக்கில் காணி பிடிப்பு!



இந்தியா சென்றிருந்த ரணில் காணி அதிகாரம் காவல்துறை அதிகாரம் பற்றி பேசியுள்ள நிலையில் வடமராட்சி கிழக்கின் கட்டைக்காடு பகுதியில் கடற்படைக்காக காணி அளவிடும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனினும் வழமை போல காணி உரிமையாளர், பிரதேச மக்கள் மற்றும் அரசியல்வாதிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழர் ஒருவருக்கு சொந்தமான காணியை கடற்படைக்கு சுவீகரிப்பதற்காக நில அளவைத் திணைக்களம் யாழ்ப்பாணத்திலிருந்து வருகைதந்திருந்தனர்.

அவர்களை மறித்த காணி உரிமையாளர், கிராம மக்கள், அளவீடு செய்வதற்கு அனுமதிக்க முடியாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் நில அளவை அதிகாரி தனக்கு எழுத்து மூலமாக கடிதம் ஒன்றினை தருமாறு காணி உரிமையாளரிடம் தெரிவித்தார்.

காணி உரிமையாளர், வடமராட்சி கிழக்கு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்  வடமராட்சி கிழக்கு மக்கள் ஒன்றியத்தின் தலைவர் செல்வன் ஆகியோர் ஒப்பமிட்டு கடிதத்தை வழங்கினர்.

இந்நிலையில் குறித்த காணி அளவீடு செய்வதை நிறுத்திவிட்டு நில அளவைத் திணைக்களத்தினர் திரும்பிச் சென்றுள்ளனர்.

அதேவேளை வடமராட்சி கிழக்கில் இன்றிலிருந்து தொடர்ச்சியாக ஐந்து தினங்கள் தமிழர்களான தனியாருக்கு சொந்தமாக காணிகளை கடற்படைக்கு சுவீகரிக்கும்  நடவடிக்கைகள் இடம் பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


No comments