பாராளுமன்ற அனுமதி பெற்ற பின்னரே எல்லாம்!

 


பாராளுமன்றம் அனுமதி வழங்கிய பின்னரே இந்தியாவுடனான ஒப்பந்தங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என வௌிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அரசாங்கங்களுக்கிடையில் மாத்திரமன்றி, தனியார் துறையினருக்கிடையிலும் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான பின்னணியை உருவாக்குவது தொடர்பில் இந்தியாவுடன் கலந்துரையாடப்பட்டது. வடக்கில் மீனவர்களால் மேற்கொள்ளப்படும் இழுவைமடி மீன்பிடியை நிறுத்துவது தொடர்பிலும், இலங்கை மீனவர்களுக்கு அரபிக் கடலுக்கு செல்வதற்கான அனுமதியை வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. பரஸ்பர பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத விடயங்களை மேற்கொள்வது தொடர்பில் இருதரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட இணங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.


திருகோணமலை மாவட்டத்தை முழுமையாக உள்ளடக்கிய வகையில் அல்லது அதன் ஒரு பகுதியை உள்ளடக்கிய வகையில், பொருளாதார அபிவிருத்தியை மேற்கொள்வது என்பது குறித்து அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்படும். துறைமுக அபிவிருத்தி, எண்ணெய் குதங்களின் அபிவிருத்தி, பிராந்திய வலுசக்தி மைய அபிவிருத்தி, கைத்தொழில் பூங்கா நிர்மாணம் உள்ளிட்ட விடயங்களில் எவ்விதமான அபிவிருத்தியை மேற்கொள்வது என்பது தொடர்பில் அரசாங்கம் தீர்மானிக்கும் எனவும் இலங்கை உரிய விடயம் தொடர்பில் தீர்மானித்ததன் பின்னர் இந்தியா ஆர்வம் செலுத்தும் விடயங்களில் அரச அல்லது தனியார் துறையினரின் பங்களிப்புடன் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

இதனிடையே, இந்தியாவுடனான ஒப்பந்தங்கள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டு அமைச்சரவை அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி கருத்து வௌியிட்டார்.

No comments