நகரங்களும் வாடகைக்கு?



நாடளாவிய ரீதியில் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள வர்த்தகப் பெறுமதிமிக்க காணிகளை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்குத் தேவையான பணிகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக நகர அபிவிருத்தி, மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

‘நாடளாவிய ரீதியில், முக்கியமாக கொழும்பு போன்ற முக்கிய நகரங்களில் வணிக மதிப்புள்ள அரச காணிகள் உள்ளன.

பொருளாதார ரீதியில் நாட்டுக்கும் மக்களுக்கும் பயன்தரும் வகையில் புதிய முதலீட்டாளர்களுக்கு அவற்றை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் நகர அபிவிருத்தி தொடர்பில் நாட்டுக்கு சாதகமான பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் திருகோணமலை, எல்ல, நுவரெலியா, கண்டி உள்ளிட்ட நகரங்களை சுற்றுலா பயணிகளை மேலும் கவரக்கூடிய வகையில் அபிவிருத்தி செய்வதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட அரச நிறுவனங்களின் பங்களிப்புடன், அப்பணிகளை முன்னெடுப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு தற்போது தடைப்பட்டுள்ள கொழும்பு திண்மக் கழிவு முகாமைத்துவத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை அரச – தனியார் ஒருங்கிணைந்த வேலைத்திட்டமாக முன்னெடுக்க தனியார் முதலீட்டாளரைத் தேர்ந்தெடுப்பதற்கு அவசியமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நாட்டில் உள்ள 24 கடற்கரைப் பகுதிகள் சுற்றுலாத் தலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் வகையில் அவற்றை அபிவிருத்தி செய்ய, முதலீட்டாளர்களுக்கு வழங்க உத்தேசித்துள்ளது.

கடற்றொழில் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுகளுடன் இணைந்து குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.


இதன்போது கரையோரப் பிரதேசங்களுக்கு சூழல்சார் பாதிப்புகள் ஏற்படாமல் அதனைப் பாதுகாக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.’

No comments