சமஷ்டி குறித்து கனவு காணக் கூடாது : சுரேன் ராகவன் எச்சரிக்கை


நாட்டில் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வுக்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்போவதில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேன் ராகவன் தெரிவித்தார்.

அதிகாரப் பகிர்வு தொடர்பான தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் கருத்துக்களானது தெற்கு இளைஞர்களை தூண்டிவிட்டு, மீண்டும் யுத்தத்திற்கு வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே இவ்வாறு குறிப்பிட்டார். 

மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக நான்கு சுற்றுப் பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட தமிழ் பிரதிநிதிகள், இது அவசியமானது அல்ல என்றும் சமஷ்டி முறையிலான தீர்வே தங்களுக்கு வேண்டும் என்றும் வெளியே சென்று கருத்துக்களை வெளியிடுகிறார்கள்.

நான் இவர்களிடம் ஒன்றைக் கூறிக்கொள்கிறேன். கனவுக் கணாதீர்கள்.

சமஷ்டி கோரிக்கையுடன் வட்டுக்கோட்டைவரை சென்று, மீண்டும் 2009 ஆம் ஆண்டு இந்நாடு பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் இரத்த ஆறுக்கு மத்தியில் திரும்பி வந்துள்ளது.

இவ்வாறு இருக்க மீண்டும் யுத்தமொன்றையா நீங்கள் எதிர்ப்பார்க்கின்றீர்கள்? அப்படியென்றால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அன்று சரத்பொன்சேகாவுடன் இணைந்து, சிங்கக் கொடியை தூக்கிப் பிடித்து, ஐக்கிய இலங்கைக்குள் பெரும்பான்மை சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வொன்றுக்கு செல்வோம் என்றே யாழில் கூறியிருந்தார்.

அப்படியென்றால், இப்போது ஏன் இதற்கு மாறான ஒரு கருத்தை இவர்கள் வெளியிட வேண்டும்?

அதுவும் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடந்துக் கொண்டிருக்கும்போதே ஏன் இவ்வாறு கூற வேண்டும்?

இந்த நாட்டை ஒருபோதும் பிரிக்க இடமளிக்க முடியாது. இனியும் இந்நாடு இனவாத யுத்தத்திற்கு முகம் கொடுக்காது.

எனவே, மீண்டும் இதற்குள் நாட்டை தள்ள முயற்சிக்க வேண்டாம். அமைதியாக இருக்கும் தெற்கு இளைஞர்களை மீண்டும் தூண்டிவிட வேண்டாம் என நான் இவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

இது எச்சரிக்கை கிடையாது. உண்மையைத்தான் கூறுகிறேன். இந்நாட்டிலுள்ள அப்பாவி விவசாயிகள் முதற்கொண்டு அனைவரும் இதனைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அமெரிக்கா தூதுவரையும், இந்திய உயர்ஸ்தானிகரையும் மகிழ்ச்சிப் படுத்த நாம் கருத்துக்களை வெளியிட வேண்டிய அவசியம் கிடையாது.

நாம் ஒரு இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும்போது, அந்தப் பயணம் முடிவடையும் முன்னரே சமஷ்டியைக் கோருவதை, வடக்கு மக்கள் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

இதனை நான் வடமாகாண முன்னாள் ஆளுநர் என்ற வகையில் உறுதியாகக்கூறுகிறேன்.

தமிழ் இனவாதிகளால் மேற்கொள்ளப்படும் இந்த செயற்பாட்டை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments