ரஷ்யாவில் ஆயுத கிளர்ச்சிக் குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார் எவ்ஜெனி பிரிகோஜின்


ரஷ்ய இராணுவம் வாக்னர் படைகள் மீது கொடிய ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக குற்றம் சாட்டி கிளர்ச்சியைத் தூண்டியதற்காக ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படைக் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின்  மீது கிரிமினல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ரஷ்யாவின் பாதுகாப்பு சேவைகளான எஃப்எஸ்பி (FSB) பிரிகோஜினுக்கு எதிராக ஒரு கிரிமினல் வழக்கைத் திறந்துள்ளதாக ரஷ்ய அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

பிரிகோஜின் ஆயுதமேந்திய கிளர்ச்சிக்கு அழைப்பு விடுத்தார் மற்றும் ரஷ்யாவில் ஆயுதமேந்திய உள்நாட்டு மோதலைத் தொடங்க முயற்சித்தார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ப்ரிகோஜினின் உத்தரவுகளை மீறவும், அவரைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கவும் வாக்னர் போராளிகளுக்கு எஃப்எஸ்பி அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

எவ்ஜெனி பிரிகோஜின் ரஷ்ய இராணுவத் தலைமை அகற்றவேண்டும். இதற்காக தன்னிடம் உள்ள 25,000 படையினருடன் இராணுவத் தலைமையகம் உள்ள ரோஸ்டோவ் நோக்கி நகரவுள்ளதாக ரெலிகிராமில் காணொளி ஒன்றை வெளியிட்டார்.

அதில் வாக்னர் படைகளின் முகாங்கள் மீது ரஷ்ய இராணுவம் ஏவுகணைத் தாக்குதலைகளை நடத்தியதாகவும் இதில் தனது படைகளைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்த ஏவுகணைகளுக்ளை தங்கள் மீது ஏவ ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு உத்தரவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். இருப்பினும் அவர் தனது கூற்றுகளை ஆதரிக்க எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை.

எங்கள் சிறுவர்களையும், பல்லாயிரக்கணக்கான ரஷ்ய வீரர்களின் உயிர்களையும் உக்ரைனில் நடந்த போரில் காவு கொடுத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

இராணுவத் தலைமையை அகற்ற வரும் போது எங்களை எதிர்க்க வேண்டாம் என்று நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு செய்யும் எவரும் அச்சுறுத்தலாகக் கருதப்பட்டு அழிக்கப்படுவார்கள். இது இராணுவச் சதி இல்லை. இது நீதிக்கான அணிவகுப்பு. எங்களது நடவடிக்கைகள் படையினருக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படுத்தாது என்று கூறினார்.

வாக்னர் படைகளின் படையணிகளை மொஸ்கோ வருவதை நிறுத்தி தங்கள் முகாங்களுக்கு செல்லுங்கள் என்று உக்ரைனில் உள்ள ரஷ்யப் படைகளின் துணைத் தலைவரான ஜெனரல் செர்ஜி சுரோவிகின் அழைப்பு விடுத்துள்ளார். இவர் கடந்த காலத்தில் ப்ரிகோஜினின் தலைமையைப் பாராட்டியவர்.

நாங்கள் ஒரே இரத்தம் கொண்டவர்கள், நாங்கள் போர்வீரர்கள், என்று ஒரு காணொளியில் கூறினார் ஜெனரல் செர்ஜி சுரோவிகி. எங்கள் நாட்டிற்கு கடினமான நேரத்தில் நீங்கள் எதிரியின் கைகளில் விளையாடக்கூடாது என்று வலிறுத்தினார்.

வாக்னர் துணை இராணுவக் குழுவின் தலைவர் தெரிவித்த கருத்தை ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் மறுத்துள்ளது. தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கிரேம்ளின் கூறியுள்ளது.

வாக்னர் குழு என்பது உக்ரைனில் ரஷ்ய படைகளுடன் இணைந்து போராடி வரும் துணை இராணுவ அமைப்பாகும். சமீபத்திய மாதங்களில், ப்ரிகோஜின் ரஷ்யாவின் இராணுவத் தலைமையை விமர்சிப்பதில்  குரல் கொடுத்து வருகிறார்.

மே மாதம் ஒரு காணொளிச் செய்திக்குப் பிறகு, பிரிகோஜின் தனது படைகளின் உடல்களால் சூழப்பட்டு பின்புலத்தில் ரஷ்ய பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்கு மற்றும் பொதுப் பணியாளர்களின் தலைவரான வலேரி ஜெராசிமோவ் ஆகியோர் போதுமான வெடிமருந்துகளை வழங்கவில்லை என்று திட்டினார் என்பது நினைவூட்டத்தக்கது.

No comments