பலாலியை வைத்திருப்பது யார்?ஒருபுறம் பலாலி சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவிற்கு திறந்துவிட்டுள்ளதாக இலங்கை அரசு கூறிவருகின்ற நிலையில் மறுபுறம் பலாலியிலுள்ள இலங்கை  விமானப்படை தளத்தினை சீனாவிற்கு திறந்துவிட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.

பலாலியில்  புதிதாக நிறுவப்பட்ட விமான சுத்திகரிப்பு நிலையம்  20 ஆம் திகதி விமானப்படைத் தளபதி எயார் மார்சல் சுதர்சன பத்திரனவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.  

சுத்திகரிப்பு நிலையத்தின் வடிவமைப்பை சீனா ஏவியேசன் டெக்னாலஜி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கூட்டுத்தாபனத்தின் நிபுணர்கள் குழுவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அத்துடன் விமான  பழுதுபார்ப்பு மற்றும் உபகரணங்கள் நிறுவுதல் ஆகியவையும் சீன மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றமை தெரியவந்துள்ளது.

விமான சுத்திகரிப்பு நிலைய திறப்பு விழாவில் விமானப்படை தளபதி , மற்றும் சீன தேசிய விமான தொழில்நுட்ப இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பிரதிநிதிகள் குழுவும் கலந்து கொண்டிருந்தனர்.

இதனிடையே பலாலி சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவின் கோரிக்கையின் பேரில் மேலும் 300மீற்றர் நீடித்து நிர்மாணிக்கவுள்ளதாக இலங்கை அரசு கடந்த வாரமே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments