அதானிக்கு அனுமதியில்லை!உள்ளுர் மக்களிற்கான மனித நேய உதவிகள் தொடர்பில் இந்திய அதானி நிறுவனம் இழுத்தடிப்புக்களை செய்துவருகின்ற நிலையில் கிளிநொச்சி – கௌதாரி முனையில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பது தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்தப்படவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

இன்று புதன்கிழமை நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கணைப்புக்குழுக் கூட்டத்தில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் அமைப்பதற்கு இன்றைய கூட்டத்திலும் அனுமதி வழங்கப்படவில்லை.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களான கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன்பந்துல சேன ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றிருந்தது.

கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், சிவஞானம் சிறீதரன், செல்வராசா கஜேந்திரன், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர்கள், வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், வடமாகாண அமைச்சு சார்ந்த திணைக்களங்களின் பணிப்பாளர்கள், இராணுவ உயரதிகாரிகள், காவல்துறை உயரதிகாரிகள் என பல தரப்பினர் கலந்து கொண்டனர்.

இதன்போது, அதாணி குழுமத்தினால் பூநகரி கௌதாரிமுனை பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் அமைப்பது தொடர்பான திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் கௌதாரி முனை மக்களிற்கு மக்களிற்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த உதவிகள் தொடர்பில் உறுதிகளும் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதானி குழுமத்தின் விண்ணப்பம் முடிவுகள் இன்றி பிற்போடப்பட்டுள்ளது.


No comments