யாழில். வீடுடைத்து கொள்ளையடித்த குற்றத்தில் இளம் பெண் கைது


யாழ்ப்பாணத்தில் வீடு உடைத்து திருடிய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொன்னையா வீதியில் உள்ள வீடொன்றினை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை உடைத்து சுமார் 08 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 06.5 பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.   

அது தொடர்பில் வீட்டின் உரிமையாளரால் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , 24 வயதான இளம் பெண்ணை சந்தேகத்தில் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர். 

விசாரணைகளில் குறித்த வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட  3, 3/4 பவுண் தாலிக்கொடி தனியார் நிதி நிறுவனத்தில் 3 இலட்ச ரூபாய்க்கு அடகு வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது. அத்துடன் 2 , 3/4 பவுண் நகை பிறிதொரு வீட்டின் பூச்சாடியின் கீழ் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அதேவேளை அடகு வைக்கப்பட்டு பெறப்பட்ட பணத்தில் 08 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்பட்ட நிலையில் மிகுதி 2 இலட்சத்து 92 ஆயிரம் ரூபாய் பணத்தினையும் பொலிஸார் மீட்டுள்ளனர். 

மீட்கப்பட்ட பணம் மற்றும் நகைகளையும் , விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரையும் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

No comments