மக்கள் ஆணையைப் புறந்தள்ளி ஆட்சியைக் கொண்டுசெல்லவே முடியாது


மக்கள் ஆணையைப் புறந்தள்ளி ஆட்சியைக் கொண்டுசெல்லவே முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர், மக்களின் ஆணைக்கு எதிராக ஆட்சியைத் தொடர்வது ஜனநாயக விரோதமானது என்றும் குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசாங்கம் விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ, அடுத்தாண்டு ஒக்டோபரில் ஜனாதிபதித் தேர்தலை நிச்சயமாக நடத்தியே ஆக வேண்டும்.

தேர்தல் ஒன்று இடம்பெற்றாலும் இடம்பெறாவிட்டாலும், எந்தவொரு வித்தியாசமும் நேர்ந்துவிடாது என்று ஜனநாயகத்திற்கு எதிரான கருத்தொன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க நுவரெலியாவில் வைத்து அண்மையில் தெரிவித்துள்ளார்.

அதுவும், உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் முன்பாகவே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதாவது, இப்போதைக்கு நாட்டில் தேர்தல் ஒன்று நடக்காது என்பதை ஜனாதிபதி தெளிவாக தெரிவித்துள்ளார்.

ஆனால், அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்துதான் அதனை நாடாளுமன்றுக்குக் கூட கொண்டுவரவிடாமல் தடுத்திருந்தன.

அரசாங்கத்தின் கொள்கைகளினால் நாட்டு மக்கள் கிளர்ந்தெழுவார்கள் என்று தெரிந்துக் கொண்டுதான் அரசாங்கம் இந்தச் சட்டமூலத்தைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்த நிலையில், ஊடகங்களைக் கட்டுப்படுத்த தற்போது அரசாங்கமானத நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஒளிபரப்பு ஒழுங்குச் சட்டமூலம் நடைமுறைப்படுத்தப்படுமானால், 33 ஊடகங்களின் அனுமதிப் பத்திரம் இரத்துச் செய்யப்படும் அபாயம் காணப்படுகிறது.

அரசாங்கத்திற்கு எதிராக ஜனநாயக ரீதியாக எழுந்து நிற்கும் நிறுவனங்களையோ நபர்களையோ, பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தின் ஊடாக 20 வருடங்களுக்கு விளக்கமறியலில் வைக்கும் சட்டத்தை கொண்டுவர அரசாங்கம் முயற்சித்தது.

எதிர்கட்சிகள் அனைத்தும் இதற்கெதிராகவும் நடவடிக்கைகளை எடுத்துள்ளமையால், அரசாங்கத்திற்கு இதனை முன்கொண்டுச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான சட்டங்களைக் கொண்டுவந்தால், எதிர்க்கட்சிகளிடமிருந்து சிறிதளவிலும் ஒத்துழைப்பு கிடைக்காது.

அத்தோடு, ஜனாதிபதித் தேர்தலை அடுத்தாண்டு நிச்சயமாக நடத்தியே ஆகவேண்டிய கட்டாயம் காணப்படுகிறது.

இதற்கான செயற்பாடுகள் ஒகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்டு, செப்டம்பரில் வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டு, ஒக்டோபரில் நிச்சயமாக தேர்தலை நடத்தியே ஆக வேண்டும்.

மக்கள் ஆணையை புறந்தள்ளி ஆட்சியைக் கொண்டுசெல்லவே முடியாது. குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாக ஜனாதிபதித் தேர்தலை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாக இருந்தால், அதற்கு எம்மால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்கத் தயாராகவே இருக்கிறோம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments