போதைப் பொருள் விருந்து சுற்றிவளைப்பு


பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதைப் பொருள் விருந்து நடைபெற்ற இடத்தை சுற்றிவளைத்த பொலிஸார் 12 பேரை கைது செய்துள்ளனர்.

அவிசாவளை களனி ஆற்றுக்கு அருகில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த போதை பொருள் விருந்து நேற்றிரவு நடைபெற்றது.

முகநூல் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட போதைப் பொருள் விருந்து ஹோட்டல் ஒன்றில் நடைபெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஹோட்டலில் சுற்றிவளைப்பை மேற்கொள்ள காட்டு வழியாக பொலிஸார் சென்ற போது வீதியில் ஆங்காங்கே மரக்கட்டைகள் போடப்பட்டு தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தாகவும் பொலிஸாரின் வருகையை கண்காணிக்க சில நபர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹோட்டலுக்குள் நடப்பது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தெரியாதபடி வாழை இலைகளை பயன்படுத்தி மறைக்கப்பட்டிருந்தன.

ஒருவரிடம் தலா 3,500 ரூபாவை அறவிட்டு இந்த போதைப் பொருள் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாக கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 7 பேர் கஹதுடுவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் ஏனையவர்கள் பலாங்கொடை, பன்னிப்பிட்டிய மற்றும் அவிசாவளை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களுடன் 11 கஞ்சா சுருட்டுக்கள், 20 கிராம் ஐஸ் போதைப் பொருள், 24 டின் பியர்கள், 13 பியர் போத்தல்கள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட 20 மதுபான போத்தல்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

No comments