பருத்தித்துறையில் நகை திருட்டு ; இரண்டு மணி நேரத்தில் திருடனை பிடித்த பொலிஸ்


யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் வீடு புகுந்து, ஐந்தரைப் பவுண் தங்கச் சங்கிலியை திருடிய நபர் ஒருவர் 2 மணித்தியாலத்திற்குள் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு திருடப்பட்ட நகையும் மீட்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை 2ம் குறுக்குத் தெரு பகுதியைச் சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று தேவை நிமித்தம் நேற்றைய தினம் புதன்கிழமை வெளியில் சென்றதை சாதகமாக பயன்படுத்திய திருடன் வீடு புகுந்து ஐந்தரைப் பவுண் தங்கச் சங்கிலி மற்றும் கையடக்கத் தொலைபேசியை திருடிச் சென்றுள்ளான்.

இச்சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து 2 மணித்தியாலத்துக்குள் மூன்றாம் குறுக்குத் தெரு பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து திருடப்பட்ட சங்கிலியும் மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிசார் தெரிவித்தனர்.

திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசியை திருடன் உடனேயே விற்பனை செய்துள்ளார். இதன் மூலமாக பருத்தித்துறை பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து விரைந்து செயற்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் சந்தேகநபரை இரண்டு மணித்தியாலங்களுக்குள் கைது செய்தனர்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் திருடப்பட்ட தங்கநகை மண்ணில் புதைத்து வைத்திருந்த நிலையில் பருத்தித்துறை பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினரால் மீட்க்கப்பட்டது.

சந்தேகநபரையும் மீட்கப்பட்ட தங்க நகையையும் பருத்தித்துறை பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

No comments