நீதி கிடைப்பதில் சந்தேகம் எழுந்துள்ளது : கஜேந்திரகுமார்!


பொலிஸாரினால் தனக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக, பொலிஸாரின் ஊடாகவே விசாரணைகள் இடம்பெறுவதால், இதற்கான நீதி கிடைப்பதில் சந்தேகம் எழுந்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்ட விவகாரம் மற்றும் 3 ஆம் திகதி மருதங்கேனியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக இன்று நாடாளுமன்றில் சிறப்புரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடாளுமன்ற சிறப்புரிமையின் பிரகாரம், நேற்றைய தினம் நான் நாடாளுமன்றில் உரையாற்றிய பின்னர், பொலிஸார் என்னை கிளிநொச்சிக்கு அழைத்துச் சென்றிருக்கலாம்.

ஆனால், பொலிஸார் நேற்று என்னை கைது செய்வதில்தான் உறுதியாக இருந்தார்கள். இதுதொடர்பாக நான் சபாநாயகர் மற்றும் பிரதி சபாநாயகருக்கும் அறியப்படுத்தியிருந்தேன்.

இந்த நிலையில் சில பெரும்பான்மை ஊடகங்கள், பொலிஸாரின் சார்பாக மட்டும் செய்திகளை வெளியிட்டுள்ளமையை நான் அவதானித்தேன். இவை தவறானது.

நான் ஒழிந்துக் கொண்டதாக ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

எனது தந்தைக் கொல்லப்பட்டபோதும், வெள்ளை வான் கலாசாரம் நாட்டில் இருந்தபோதும்கூட நானும் எனது குடும்பமும் எங்கும் ஓடி ஒழிந்துக் கொள்ளவில்லை.

இது தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே கருதப்படுகிறது. இந்த விடயத்தில் பாரபட்சம் காண்பிக்கப்பட்டது.

பொலிஸாரின் இந்த செயற்பாடு தொடர்பாக பொலிஸாரே விசாரணை செய்வதால் இந்த விடயத்தில் நீதி கிடைக்குமா என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments