ஹிட்லர் போன்றே செயற்படுகின்றார் ஜனாதிபதி


வாக்கு அரசியலுக்கு ஆசைப்பட்டு, தொல்பொருள் சின்னங்கள் மீது கை வைப்பதை ஜனாதிபதி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை  நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவிக்கையில்,

 “ஜனாதிபதியிடம் நான் ஒன்றை கூறிக்கொள்ள வேண்டும். வாக்குகளுக்கு ஆசைப்பட்டு, இந்நாட்டின் தொல்பொருட் சின்னங்களில் கை வைக்க வேண்டாம்.

இது நாம் காலாகாலமாக பாதுகாத்து வந்த எமது சொத்துக்களாகும். இதில் கை வைத்தால் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.

அத்தோடு, அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடும் சட்டங்களை கொண்டுவந்து, ஹிட்லர் போன்றுதான் ஜனாதிபதி இன்று செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த நாட்டில் இன்று பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு மட்டும், 11 ஆயிரத்து 500 சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தாண்டின் முதல் 5 மாதங்களில் மட்டும், 38 துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும், 3 துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

நாட்டு மக்களுக்கு இவ்வாறு பாதுகாப்பே இல்லாத நிலையில்தான், அரசாங்கம் நாட்டை முன்னேற்றிக் கொண்டிருப்பதாக மார் தட்டிக் கொண்டிருக்கிறது.

இப்படியான தரப்பினருடன் இணைந்து, நாட்டை முன்னேற்ற நாம் ஒருபோதும் தயாராக இல்லை” என மேலும் தெரிவித்துள்ளார்.

No comments