ஊழலை இல்லாதொழிக்க முடியாது


எந்த ஆட்சியிலும் ஊழலை இல்லாதொழிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

“இலங்கையைப் பொறுத்தவரையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் ஊழலை ஒழிக்கவே முடியாது.

அனைத்து அரசாங்கங்களும் ஆட்சிக்கு வரும்போது பல வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கி தமது அரசாங்கத்தை அமைக்கின்றன.

மாறிமாறி வரும் அனைத்து அரசாங்கங்கள் இதனையே வழக்கமாகக் கொண்டுள்ளன.

இவ்வாறுதான் மோசடி செய்யப்பட்ட அரச நிதியை அரசுடமையாக்குவதாகக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஊழல்வாதிகள் எவரும் தண்டனைக்குட்படுத்தப்படவில்லை.

ஊழல் என்பது புதியதொரு விடயமல்ல. தேர்தல் முறைமையின் ஊடாகவே ஊழல் அதிகரித்துள்ளது. நாடாளுமன்றம் தற்போது ஒரு வர்த்தக நிறுவனம் போன்றே செயற்படுகின்றது.

சூழ்நிலைக்குத் தேவையான சட்டங்களை இயற்றியாவது ஊழலை ஒழிக்க வேண்டும்.

வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் விலைமனுக் கோரல் விவகாரத்தில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெறுகிறன.

எனவே இவற்றினைக் கருத்திற் கொண்டே ஊழல் எதிர்ப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

யார் ஆட்சிக்கு வந்தாலும் ஊழலை இல்லாதொழிக்க முடியாது என்று மக்கள் குறிப்பிடுவது உண்மையான விடயமாகும்” என மேலும் தெரிவித்தார். 

No comments