அனலைதீவு வைத்தியசாலைக்குள் பொலிஸாருடன் அத்துமீறி நுழைத்த புலம்பெயர் நாட்டவர் கைது!


யாழ்ப்பாணம் அனலைதீவு பிரதேச வைத்தியசாலைக்குள் இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தருடன் புலம்பெயர் நாட்டவர் ஒருவர் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த வைத்தியர் மற்றும் பெண் ஊழியர்களுடன் முரண்பட்டு , வைத்திய சாலை சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 

அதேவேளை அவருடன் சென்ற இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவருக்கும் எதிராக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.  

வெளிநாடொன்றில் இருந்து அனலைதீவு பகுதியில் வந்து தங்கி நின்ற நபர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் , இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சகிதம் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்டு , அங்கு கடமையில் இருந்த பெண் வைத்தியர் மற்றும் பெண் தாதிய உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்டவர்களுடன் முரண்பட்டு வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் , வைத்தியசாலையில் இருந்த தளபாடங்களுக்கும் சேதம் விளைவித்த பின்னர் அங்கிருந்து சென்றிருந்தார். 

அது தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தால் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, வடமாகாண சுகாதார பணிமனை ஆகியோருக்கு முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. 

அதேவேளை ஆதாரமாக வைத்தியசாலை கண்காணிப்பு கமராவின் காணொளியும் பொலிஸாருக்கு வழங்கப்பட்டது.அதன் அடிப்படையில் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து , கடமையில் இருந்த பெண் வைத்தியர் . பெண் தாதிய உத்தியோகஸ்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்து, அவர்களை அச்சுறுத்தியமை , வைத்தியசாலை சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் புலம்பெயர் நாட்டவர் நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் அவரை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இதேவேளை குறித்த நபருடன் சென்ற இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கும் எதிராக பொலிஸாரினால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. 


No comments