பனங்காட்டான் எழுதிய ''வருட இறுதிக்குள் இனப்பிரச்சனை தீர்வு: சம்பந்தன் அடிச்சுவட்டில் ரணில்!''


தந்தை செல்வாவின் 125வது பிறந்த தின விழா உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுக் 
கொண்டிருக்கையில் அவரது தொகுதியான காங்கேசன்துறையில் திஸ்ஸ விகாரை அமைப்பது ரணில் அரசு அவருக்கு வழங்கும் அதியுயர் அவமரியாதை.
இனப்பிரச்சனைக்கான தீர்வு பொங்கலுக்கு முன், தீபாவளிக்கு முன் என்று கூறி வந்த சம்பந்தனின் பாதையில், வருட இறுதிக்குள் தீர்வு என்று ரணில் கூறுவது.... கேட்டுக் கேட்டு புளித்துப்போன கீறல் விழுந்த ரெக்கோட். 

ரணில் விக்கிரமசிங்கவின் நிகழ்கால ஆட்சியில் கடந்த வார ஸ்பெசல் தையிட்டி. தமிழ் மண்ணில் புதிய ஒரு விகாரைக்கு கலசம் வைக்கும் நிகழ்வையொட்டிய மக்கள் போராட்டம் இது. 

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போராட்டமாக மக்களைத் திசை திருப்பி அல்லாட வைப்பதும் அரசியல் கட்சிகளுக்குள் பிளவை ஏற்படுத்தி அதில் லாபம் பெறுவதுமே ரணிலின் ஆதாய அரசியல். 

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளது போராட்டம் வருடக்கணக்கில் தொடர்கிறது. அதற்கு தீர்வுகண்டு முடித்து வைக்கும் நாட்டம் ரணில் தரப்புக்குக் கிடையாது. மாறாக ஒவ்வொரு வாரமும் ஏதாவதொரு புதிய விவகாரத்தை உருவாக்கி அதனையிட்டு தமிழரை வீதி வீதியாக போராட வைப்பதும், அதனை கைவிடச் செய்வதற்காக இன்னொரு போராட்டத்துக்கு விதை போடுவதும் இவருடன் கூடப்பிறந்த பழக்கதோசம். 

தொல்பொருள் திணைக்களத்தின் பிரதான பணி இதனையொட்டியதாகவே மாற்றப்பட்டுள்ளது. கஞ்சிக்குப் பயறு போடுவது போன்று எப்போதாவது ஒன்றில் நீதிமன்றத் தீர்ப்பு நீதியானதாக அமைந்துவிடும். அதனையும் தமது ஆட்சியின் அரசியல் தலையீடற்ற நீதிபரிபாலனத்தின் நேர்மையென ஆட்சிபீடம் காட்டிக்கொள்ளும். 

தீர்க்க வேண்டிய பிரச்சனைகளை தீர்க்காது, அதற்காக இன்னொரு பிரச்சனையை உருவாக்குவதனூடாக அதனைத் தீர்த்துக்கட்டுவது ரணிலின் பாணி என்பதற்கு உதாரணமாக ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்து சம்பவம் ஒன்றை நினைவூட்டலாம். 

அப்போது ரணில் கல்வி அமைச்சராக இருந்தார். குரு சங்கமய என்ற பெயரில் இயங்கிய அதிகூடிய ஆசிரியர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கம் பாரிய போராட்டம் ஒன்றை நடத்தியது. வாரக்கணக்கில் இது நீண்டு சென்றது. பேச்சுவார்த்தை எதுவும் இணக்கத்தைக் கொண்டுவரவில்லை. 

திடீரென இச்சங்கத்தின் செயலாளர் எச்.என்.பெர்னான்டோவுக்கு கொழும்புக்கு வெளியே தூரப்பிரதேசத்துக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது. அரசியல் ரீதியான பழி வாங்கும் நடவடிக்கை இது. சம்பள உயர்வு, நியாயமான பதவி உயர்வுகளை கோரிய பதாதைகளுடன் இடம்பெற்று வந்த ஆசிரியர்களது போராட்டத்தின் இலக்கு மாறியது. சங்கச் செயலாளர் பெர்னான்டோவின் இடமாற்றத்தை உடன் ரத்துச் செய்ய வேண்டுமென புதிய பதாதைகளோடு போராட்டம் காணப்பட்டது. 

நல்ல பிள்ளையாக தம்மைக் காட்டிக்கொள்ள விரும்பிய ரணில், போராட்டக்காரருடன் பேச்சு நடத்தி ஒரு சமரசத்துக்கு வந்தார். போராட்டத்தை நிறுத்தி அமைச்சரவையுடன் பேசி இடமாற்றத்தை ரத்துச் செய்யலாமென்று உறுதி கூறி, அவ்வாறே செய்து முடித்தார். 

போராட்டத்தின் அடிப்படைக் கோரிக்கை மறக்கப்பட்டுவிட்டது. சங்கச் செயலாளரின் இடமாற்றம் ரத்துச் செய்யப்பட்டதோடு போராட்டம் முடிவுற்றது. தங்கள் போராட்டம் வெற்றி பெற்றதாக ஆசிரியர் சங்கம் மகிழ்வடைய, தமது குயுக்தி வெற்றி கண்டதாக ரணில் குளிர்ச்சியடைந்தார். ஆசிரியர் சங்க செயலாளர் எச்.என்.பெர்னான்டோ 1971ல் கிளர்ச்சி நடத்திய ஜே.வி.பி.யின் தலைவர் றோகண விஜேவீரவின் மனைவியின் கூடப்பிறந்த சகோதரர் என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியது. 

ஆண்டுகள் நாற்பது கடந்தும் ரணிலின் அரசியல் தந்திரமும் சூத்திரமும் மாறவில்லை. எல்லோரையும் எப்போதும் ஏமாற்றத் தெரிந்த அரசியல்வாதி இவர்.  இப்போது நிறைவேற்று அதிகாரமும் சேர்ந்து விட்டதால் சொல்லத் தேவையில்லை. 

தையிட்டியில் போராட்டம் நடந்து கொண்டிருக்கையில் இங்கிலாந்து மன்னர் சார்ள்ஸின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்ள ரணில் இங்கிலாந்து பயணமானார். பிரதமரோ அல்லது சம்பந்தப்பட்ட துறைசார் அமைச்சர் எவருமோ தையிட்டி போராட்டத்தை ஒரு விவகாரமாகவே பார்க்கவில்லை. திஸ்ஸ விகாரை என்ற பெயரிலான இந்த பௌத்த வழிபாட்டுத் தலத்துக்கு 2019ல் அடிக்கல் நாட்டப்பட்டது. நான்கு ஆண்டுகளில் விகாரை கட்டி முடிக்கப்பட்டு அதன் உச்சியில் கலசம் வைக்கப்படும்போது போராட்டம் நடைபெறுகிறது. போராட்டத்தை  ஆரம்பித்தவர்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர். பின்னர் தமிழரசுக் கட்சியினரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கஜன் இராமநாதனும் இணைந்து கொண்டனர். 

2019 என்பது நல்லாட்சிக் காலம். தமிழரசுக் கட்சியினர் ரணிலுடன் கூடிக்குலாவி தேநிலவு கழித்த காலம். ஜனாதிபதி மைத்திரிக்கு சவால் விட்டு ரணிலை மீண்டும் பிரதராக்கிய தமிழரசுக் கட்சியினர், அடிக்கல் நாட்டும்போது அதனை எதிர்க்கவில்லை, தடுக்கவுமில்லை. இப்போது போராட்டத்துக்கு முகம் காட்டுகின்றனர். 

தமிழரசின் தற்போதைய தலைவர் மாவை சேனாதிராஜாவும், புதிய தலைவராக விரும்பும் சுமந்திரனும் இரட்டையர்களாக போராட்டத்துக்கு தரிசனம் கொடுக்கின்றனர். தலைவர் பதவிக்கு கண் வைத்திருப்பவர்களென ஊடகங்கள் அடையாளம் காட்டும் சி.வி.கே.சிவஞானமும், கிளிநொச்சி சிறீதரனும் ஒருவர் முகம் ஒருவர் பார்க்காது போராட்ட அரங்கில் அமர்ந்திருக்கிறார்கள். 

எதற்கெடுத்தாலும் மீண்டும் போராட்டம் வெடிக்குமென சவால் விடும் மாவையர் வாயே திறக்கவில்லை. எந்த விவகாரமானாலும் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வேனென்று அறைகூவும் சுமந்திரன் தையிட்டியில் அப்படிச் சொல்லவில்லை. என்ன காரணம்? 

ராணுவத்தின் வழிபாட்டுக்காக விகாரை அமைக்கப்படுவதாக படைத்தரப்பில் கூறப்படுகிறது. ராணுவத்தில் பௌத்தர்கள் மட்டும்தானா உள்ளனர்? கத்தோலிக்கர்கள் இல்லையா? அவர்கள் வழிபாட்டுக்கு ஒரு தேவாலயம் தேவையில்லையா? போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறு எண்ணிக்கையினர்.  உள்;ராட்சிச் சபை தேர்தலுக்கு அபேட்சகர்களாக நியமனம் செய்தவர்கள் எங்கே போனார்கள்? இப்படித்தான் தமிழ் தேசிய அரசியல் போகுமென்றால், தமிழ் தேசியம் என்ற பெயரை தங்கள் கட்சிகளின் பெயர்களில் வைத்துக் கொள்ள இவர்களுக்கு அருகதை இல்லையென்றே சொல்ல வேண்டும். 

தமிழர் தேசம் இவ்வாறு ஒவ்வொன்றாக பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்க, இனப்பிரச்சனை தீர்வுக்கான பேச்சுவார்த்தை என்ற சுலோகத்தை ரணில் மீண்டும் தூக்கியுள்ளார். இந்த வாரத்தில் மூன்று நாட்கள் வடபகுதி தமிழர் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்த அவர் முன்வந்துள்ளார். தமிழர் பிரச்சனை என்பதை வடக்குத் தமிழருக்கான பிரச்சனை என்று ஆரம்பத்திலிருந்தே ரணில் கூறி வருவது வடக்கையும் கிழக்கையும் பிரித்தாளும் இன்னொரு தந்திரம். 

தமிழர் தரப்பு ஒருபோதுமே ஒன்றுபட்டு தீர்வு காண முன்வருவதில்லையென்ற இவரது குற்றச்சாட்டை தமிழர் தரப்பினர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கு முன்னர் அவர்கள் பல தடவை ஏமாற்றப்பட்ட அனுபவம் சிலவேளை அவர்கள் இணைந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்கு விருப்பம் காட்டாமைக்குக் காரணமாக இருக்கலாம். அதேசமயம், தமிழ் தேசிய கட்சிகள் தங்கள் எதிர்கால வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு இணைந்து செயற்பட தயங்குவதும் ஒரு காரணம். சிங்கள தலைமைகள் பிரதான நிகழ்ச்சி நிரலில் இணைய மறுப்பதைப் போன்றது இது. 

தமிழ் அரசியல் வானில் சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் இணைய மறுத்த காலமொன்று இருந்தது. ஆனால், 1972ல் இது மாற்றம் பெற்றது. அன்று ஒற்றைக்கோட்டில் தமிழர் ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்டபோது விட்டுக்கொடுத்து இணைந்த எஸ்.ஜே.வி.செல்வநாயகம், ஜி.ஜி.பொன்னம்பலம் போன்றவர்கள் இனி பிறக்கப்போவதில்லை. எனவே தமிழ் கட்சிகளின் இணைப்பை ஒரு சாட்டாக வைத்து அரசியல் பிழைப்பு நடத்த ரணில் முயற்சிக்கக்கூடாது. 

நாட்டின் ஜனாதிபதி என்ற வகையிலும், சகல நிறைவேற்று அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்டவர் என்ற வகையிலும், தாம் விரும்பும் தீர்மானங்களை பெரும்பான்மையுடன் நிறைவேற்றும் நாடாளுமன்றத்தின் தலைவர் என்ற வகையிலும் இனப்பிரச்சனைத் தீர்வுக்கான தம்மிடமுள்ள தீர்வுத் திட்டத்தை அவர் பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்;டும். 

அதனை விடுத்து, தந்தை செல்வாவின் 125வது பிறந்த தின விழா உலகளாவிய ரீதியில் பல இடங்களிலும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்படும் வேளையில் அவரது சொந்தத் தொகுதியான காங்கேசன்துறையில் திஸ்ஸ விகாரை அமைப்பதானது ரணில் அரசு அவருக்குச் செய்யும் அதியுயர் அவமரியாதை. 

தந்தை செல்வாவின் வழியில் வந்த தமிழரசின் மூத்த தலைவர் இரா.சம்பந்தன் தமிழர் பிரச்சனைக்கான தீர்வு தைப்பொங்கலுக்கு முன்னர், தீபாவளிக்கு முன்னர், புதுவருடத்துக்கு முன்னர் என்று கூறிய அடிச்சுவட்டில் இப்போது ரணிலும் இந்த வருட டிசம்பர் மாதத்துக்குள் இனப்பிரச்சனைக்கு தீர்வு வருமென தாம் நம்புவதாக அறிவித்திருப்பது நம்பிக்கை தருவதாக அமையவில்லை. 

கடந்த வருடம் டிசம்பருக்கு முன்னர் தீர்வு, கடந்த பெப்ரவரி 4ம் திகதி சுதந்திர தின விழாவில் தீர்வு பற்றிய அறிவிப்பு என்று கூறிவந்த ரணில் இப்போது ஒரேயடியாக வருகின்ற டிசம்பருக்கு முன்னர் என்று கூறியிருப்பது..... கேட்டுக் கேட்டு புளித்துப்போன கீறல் விழுந்த ரெக்கோட்! 

No comments