உக்ரைனுக்கு மேலும் ஏவுகணைகள், டிரோன்கள் வழங்க இங்கிலாந்து உறுதி!
உக்ரைனுக்கு ஆதரவளித்து ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, இங்கிலாந்து சென்று அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்து பேசினார்.
போரில் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருவதற்காக, ரிஷி சுனக்கிடம் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இச்சந்திப்பின் போது, உக்ரைனுக்கு நூற்றுக்கணக்கான வான் பாதுகாப்பு தளவாடங்கள், 200 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லக்கூடிய நீண்ட தூர தாக்குதல் ட்ரோன்கள் உள்ளிட்டவற்றை வழங்குவதாக ரிஷி சுனக் உறுதி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேநேரம் நேற்று பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகருக்கு நேற்று மாலை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சென்றார். அவர், அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானை எலிசீ அரண்மனையில் சந்தித்து பேசினார். இதன்பின்னர், இரவு விருந்திலும் கலந்து கொண்டார்.
இந்த நிலையில், உக்ரைனுக்கு வேண்டிய ஆயுதங்களை வழங்கும் அறிவிப்பை பிரான்ஸ் அதிபர் வெளியிட்டார். உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக போர் புரிவதற்காக, கூடுதலாக இலகுரக பீரங்கிகள் மற்றும் கவச வாகனங்களை அனுப்ப பிரான்ஸ் அரசு முடிவு செய்து உள்ளது. இவற்றில், ஏ.எம்.எக்ஸ்.-10ஆர்.சி. ரக பீரங்கிகளும் அடங்கும். அவை போர்களத்தில் விரைவாக இயங்க கூடியவை. ஓரிடத்தில் இருந்து தனது நிலையை எளிதில் மாற்றும் திறன் பெற்றவை. உக்ரைனிய படைகளுக்கு அவற்றை எப்படி இயக்க வேண்டும் என்பதற்கான பயிற்சிகளையும் பிரான்ஸ் வழங்க இருக்கிறது.
இரு நாட்டு தலைவர்களும் 3 மணிநேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் இன்று அளித்த கூட்டறிக்கையில் மேற்கூறிய தகவலை வெளியிட்டனர். உக்ரைனுக்கு அரசியல், நிதி, மனிதநேய மற்றும் ராணுவ உதவிகளை எவ்வளவு காலத்திற்கு தேவைப்படுமோ அதுவரையில் பிரான்ஸ் அரசு தொடர்ந்து வழங்கி ஆதரவளிக்கும் என பாரீஸ் நகரில் வைத்து மேக்ரான் மீண்டும் வலியுறுத்தி கூறியுள்ளார்.
Post a Comment