வழமை போன்றே இம்முறையும் நினைவேந்தல்!



நினைவேந்தல்களைக் கைப்பற்ற முற்படுவோர் முதலில் சிதறிப் போய்க் கிடக்கும் நடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை கைப்பற்றிக்கொள்ள வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே, கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர்கள் இக்கோரிக்கையினை விடுத்துள்ளனர்.

பல்கலைக் கழக மாணவர் ஒன்றியமாக, பொதுக்கட்டமையுடன் இணைந்து இம்முறையும் மே 18 மிகவும் சுமூகமான முறையிலே முள்ளிவாய்க்காலில் முன்னெடுக்கப்படவுள்ளது.

நாங்கள் கடந்த காலங்களிலே சில துரதிஸ்ட வசமான சம்பவங்களை உணர்ந்துகொண்டிருக்கின்றோம்.

திலீபனின் நினைவேந்தலாக இருக்கலாம், அன்னை பூபதியின் நினைவேந்தலாக இருக்கலாம், அனைத்து இடங்களிலுமே, குழப்பங்கள் விளைவிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

தமிழர் தாயகத்திலே சர்வதேசத்திற்கு செய்தி சொல்லும் வகையில் நாங்கள் நினைவேந்தலை மேற்கொள்ள வேண்டுமெனில், ஒற்றுமையாகச் செயற்பட்டால் மாத்திரமே எங்களுக்குரிய நீதி கிடைக்கப்பெறும். ரணில் ராஜபக்சவினுடைய நரித் தந்திரங்களை புரியாது, எங்களுடைய தமிழ் பிரதிநிதிகள் ஏகோபித்த நிலையில், ஒருமித்துச் செயற்பட வேண்டும். மாறாக தனிவாத்தியம் இசைக்கக் கூடாது என்பதை மாணவர்களாக நாம் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் மாணவ பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு நாளை முதல் எதிர்வரும் 15 ஆம் திகதிவரையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கஞ்சி வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தீர்மானித்துள்ளது. முதல் நிகழ்வு நாளை (9) காலை வல்வெட்டித்துறையில் இடம்பெறவுள்ளது யாழ்ப்பாணத்தின் பாடசாலைகளுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்படவுள்ளது. இறுதி யுத்தத்தின் போது, மக்களை பட்டினியில் இருந்து காப்பதற்காக சில தன்னார்வ அமைப்புகள் தம்மிடம் இருந்த அரிசியினை பங்கிட்டு முள்ளிவாய்க்காலில் கஞ்சியாக காய்ச்சி வழங்கினர். இதனை நினைவுப்படுத்தும் வகையில் வருடாந்தம் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments