'சிவன் தோசம் - குல நாசம்' நினைவுபடுத்தினார் சிறீதரன்


சிவன் தலையில் கை வைக்கப்பட்டுள்ளது,ஆகவே இந்த நாடு நாசத்தை நோக்கி செல்லும் என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட எம்.பி.யான எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.'சிவன் தோசம் - குல நாசம்' என்ற வாக்கு மீது  இந்துக்கள் மத்தியில் அதிக  நம்பிக்கை உள்ளது என்றும் நினைவுபடுத்தினார். பாராளுமன்றத்தில் நேற்று (04) செவ்வாய்க்கிழமை  இடம்பெற்ற   விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில், 

ஓர் இனத்தினர் காலம் காலமாக கடைப் பிடித்த மத நம்பிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து செல்கிறதே தவிர குறைவடையவில்லை.தமிழர்களின் இருப்பும்,சைவத்தின் இருப்பும் திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுவது கவலைக்குரியது

வவுனியா வெடுக்குநாறி காட்டுப்பகுதியில் தமிழ்மக்கள்   பாரம்பரியமாக  வழிபட்டு வந்த ஆதிலிங்கேஸ்வரர்  ஆலயத்தின்   சிவலிங்கங்கள்  விக்கிரகங்கள் உடைத்தெறியப்பட்டுள்ளன.அம்மன் விக்கிரகத்தின் கழுத்து பகுதியை  வெட்டி வீசியெறியும் அளவிற்கு இந்த நாட்டில் இனவாதம் தலைவிரித்தாடுகின்றது.

முல்லைத்தீவு குருந்தூர் மலைப்  பகுதியில் இருந்து சிவ சின்னங்கள்,சூலம் மற்றும் சிவலிங்கம்   அழிக்கப்பட்டன .குருந்தூர் மலையில் விகாரை நிர்மாணிக்கும் பணிகளுக்கு முல்லைத்தீவு மாவட்டம் பல தடவைகள் தடையுத்தரவு பிறப்பித்தும்,நீதிமன்றத்தை மதிக்காமல் விகாரை ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

தெற்கில் மாத்திரமே நீதிமன்றங்கள் சுயாதீனமாகவும்,தைரியமாகவும் செயற்படுகின்றன .வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகள் பிறப்பிக்கும் உத்தரவை அங்குள்ள பிக்குகள், பாதுகாப்பது   தரப்பினர் மதிப்பதுதில்லை, 

இனவாதம் மற்றும் பௌத்தவாதம் பற்றி மேலோங்கி கருத்துரைக்கின்ற தரப்பினர் தான் ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் மீது  தாக்குதலை மேற்கொண்டுள்ளார்கள் .தமிழர்களின் காணி உரிமையும் பறிக்கப்படுகிறது,மத உரிமைகளும் பறிக்கப்படுகின்றன .

'சிவன் தோசம் - குல நாசம்' என்ற வாக்கு மீது  இந்துக்கள் மத்தியில் அதிக  நம்பிக்கை உள்ளது.சிவன் தலையில் கை வைக்கப்பட்டுள்ளது,ஆகவே இந்த நாடு நாசத்தை நோக்கி செல்லும் என்பதில் எவ்வித ஐயமும் கிடையாது.அதுமட்டுமல்ல ''நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் ''என்ற வார்த்தை நாளை உங்களுக்கு மிக மோசமான நிலையை ஏற்படுத்தும். 

உடைக்கப்பட்ட சிவலிங்கம் மற்றும் விக்கிரகங்களை மீள் அமைப்பதாக இரு அமைச்சர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெடுக்குநாறி பகுதிக்கு விஜயம் செய்தார்கள்.இந்த விவகாரம் சட்ட விசாரணைக்கு உட்பட்டுள்ளது,ஆகவே சட்டத்தின் பிரகாரம் நடடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டு விட்டு திரும்பி விட்டார்கள்.உடைக்கப்பட்ட விக்கிரகங்கள்  மற்றும் சிவலிங்கத்தை மீள் அமைப்பதற்கு எவ்வித சட்டத்  தடைகளும் காணப்படவில்லை.ஆலயப்பகுதியை சேதப்படுத்தினார்கள் என்ற வழக்கு மட்டுமே  உள்ளது.

இந்த இரு தமிழ் அமைச்சர்களும் நினைத்திருந்தால் விக்கிரகங்களை மீள பிரதிஷ்டை செய்திருக்க முடியும்..உடைக்கப்பட்ட சிவலிங்கத்தைக்கூட மீண்டும் வைக்க முடியாத அமைச்சர்கள் இவர்கள். இந்த நாட்டின் அமைச்சர்களாக தமிழர்கள் இருந்தால் அவர்கள் வெறும் சடப்பொருட்களாகமட்டுமே இருக்க முடியும் என்பதற்கு இந்த இரு அமைச்சர்களும் சிறந்த உதாரணம். உண்மையில் இந்த அமைச்சர்கள் ஆடையுடன் தான் திரிகிறார்களா என்ற கேள்வி தமிழ்மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

தற்போது நான் இங்கு பேசிக்கொண்டிருக்கும்போதுகூட கிளிநொத்தி மாவட்டத்தில் கௌதாரிமுனை பகுதியில் 100 ஏக்கர் காணி இறால் பண்ணை செய்கைக்காக அளக்கப்படுகிறது.கடற்தொழில் அமைச்சரின் பினாமியின் நிறுவனங்களான   கனிரா சீ பூட் பிரைவேட் லிமிடெட் ,நோர்த் சீ பூட் பாம் ஆகிய நிறுவனங்களுக்கே இந்தக்காணி 50-50 ஏக்கர்களாக அளக்க முயற்சிக்கப்படுகின்றது.  .3700 ஆண்டுகாலமாக கௌதாரி முனை பகுதியில் வாழும் தமிழர்கள் இந்த செயற்பாட்டுக்கு கடுமையாக எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள் .இதனால் தற்போது அளக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது  என்றார்.

No comments