உறக்கத்தில் அரச அமைச்சர்கள்?



திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள,அரிசி மலை பொன்பரப்பி மலை என்னும் பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவர் புத்தர் சிலை ஒன்றை வைக்க முற்பட்டதும், அதனை தடுப்பதற்கு பொதுமக்கள் முனைந்த போது அங்கு அவர் அச்சுறுத்தல் விடுத்ததாகவும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஃரூப் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

அங்கு சிலை வைப்பதை தடுக்க முற்பட்ட பொதுமக்களுக்கு பிஸ்டலை காண்பித்து, அவர் அச்சுறுத்தல் விடுத்ததாகவும் இம்ரான் மஹ்ரூப் எம். பி ர் தெரிவித்தார்.

இது சம்பந்தமாக, தனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்த அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

தொல் பொருள் திணைக்களத்தின் விசேட வர்த்தமானி அறிவித்தல்கள், மக்களின் பாரம்பரிய வசிப்பிடம் தொடர்பில் கவனத்தில் கொள்ளப்படாமலே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகளோடு பெளத்த பிக்குகளும் செல்கிறார்கள். அதிகாரிகள் பார்க்கின்ற வேலைகளோடு இவர்களுக்கு என்ன வேலை இருக்கிறது? என்றும் இம்ரான் மஃரூப் எம்பி நேரடியாக கேள்வி எழுப்பினார்.

இந்த வேளையில், பாராளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் , தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் ஆகியோரும் இது தொடர்பில், ஆதரவாக கருத்துக்களை முன் வைத்தனர்.

இம்ரான் மஃரூப் எம்பி எழுப்பிய கேள்வியின் விபரம் வருமாறு;


🔴  புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சரிடம்


திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவு அரிசி மலை பொன்பரப்பி மலை என்னும் பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவர் புத்தர் சிலை ஒன்றை வைக்க முற்பட்டதும் அதன் பின்னர் பொது மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு இன முறுகளை ஏற்படுத்திய சூழலை உருவாக்கியமையும் வருந்தத்தக்கதாகும் இது பற்றி அமைச்சர் அறிவாரா ? இது பற்றி அமைச்சரின் கருத்து யாது?

தொல்பொருள் திணைக்களத்துக்குச் சொந்தமான காணிகள் என்று வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்படும் போது அந்தக் காணிக்குள் வசிக்கும் மக்களுடைய நலன்கள் பற்றி எந்தவிதக் கவனத்திலும் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை பல தசாப்தங்களாக மக்கள் அந்தக் காணிக்குள் வசிப்பவர்களாக இருந்தால் அந்த வர்த்தமானி அறிவித்தலின் வலிதான தன்மை என்ன? அப்படியாயின் அங்கு நீண்ட காலம் குடியிருக்கும் மக்களின் நிலைமை விவசாயக் காணிகளின் நிலைமை என்ன என்பதை அமைச்சர் அறியத் தருவாரா ?

அ)

(i) தொல்பொருளியல் திணைக்களத்தினால் அண்மைக் காலத்திலிருந்து கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற காணி சுவீகரிப்புக்கள் தொடர்பாக அறிவீர்களா? என்பதையும்;


(ii) அதிகளவில் சிறுபான்மை மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்ற பிரதேசங்களில் மாத்திரம் மேற்படி சுவீகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றமைக்கான நோக்கம் யாது என்பதனையும்;


(iii) தொல்பொருளியல் திணைக்களத்தினால் சுவீகரிக்கப்படுகின்ற காணிகளை நிருவகிப்பதற்கு பௌத்த விகாரைகளையும் பௌத்த பிக்குகளையும் இணைத்துக்கொள்வதற்கான நோக்கம் யாதென்பதையும்;


அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?


(ஆ)

இன்றேல், ஏன்?

No comments