பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்:இடைக்கால விடுமுறை



தமிழ் தரப்பினை தாண்டி சிங்கள மக்கள் மத்தியிலிருந்தும் எழுந்த எதிர்ப்புக்களையடுத்து பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பிற்போடப்பட்டுள்ளது.

எனினும் நீதிமன்ற  விடுமுறை காரணமாக, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து நீதிமன்றத்துக்கு செல்வதற்கு உள்ள தடைகளை கருத்திற்கொண்டு, அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை இன்னும் சில வாரங்களுக்கு பிற்போட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், கலாநிதி விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னதாக சட்டமூலம் கடந்த 4ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையிலேயே சட்டமூலத்தை சமர்ப்பிப்பது தாமதிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் என்ற புதிய சட்டமூலம் மார்ச் 23 அன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட காலத்திலிருந்தே தமிழ் ,சிங்கள செயற்பாட்டாளர்கள் தரப்பிலிருந்தும் கடுமையாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றது.

சட்டமூலம், நாட்டின் ஜனநாயகத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக, எதிர்க்கட்சிகள், சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் பல்வேறு சிவில் மற்றும் வெகுஜன அமைப்புகள் ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஏற்கனவே அமுலில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் தமிழ் மக்களை வேட்டையாடுவதாக குற்றச்சாட்டுக்கள் சர்வதேவ மட்டத்தில் எழுந்ததையடுத்து புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை அமுல்படுத்துவதாக இலங்கை அரசு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



No comments