சமுர்த்தி கொடுப்பனவை அதிகரித்து தருவதாக கூறியவர் பணம் , தொலைபேசி என்பவற்றை அபகரித்தார்!


யாழ்ப்பாணம் அச்சுவேலி வளலாய் பகுதியில் சமுர்த்தி கொடுப்பனவை அதிகரித்து வழங்குவதாக தெரிவித்து தனிமையில் இருந்த மாற்று திறனாளி பெண்ணிடம் இனந்தெரியாத நபரால் பணம் மற்றும் பெறுமதியான கையடக்க தொலைபேசி என்பன அபகரிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் கோப்பாய் பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் பிரிவிலிருந்து வருகை தந்துள்ளதாக தெரிவித்து தையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குறித்த பெண்ணிடம் அடுத்து வரும் மாதங்களில் அரசாங்கம் ஐயாயிரம் ரூபாய் சமுர்த்தி கொடுப்பனவை பத்தாயிரம் ரூபாயாக அதிகரித்து வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனவே அதற்காக தாம் ஒவ்வொரு சமுர்த்தி பயனாளிகளிடமிருந்தும் 20 ஆயிரம் ரூபாய் பணத்தினை அறவிடுகிறோம். என தெரிவித்து நான்கு படிவங்களைக் கொடுத்து அதில் கையொப்பமிட்டு வழங்குமாறு கூறி அவரிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார்.

தன்னிடம் தற்போது அவ்வளவு தொகை பணம் இல்லை அயலிலுள்ளவர்களிடம் பெற்றுத்தான் வழங்க வேண்டும் என வயதான பெண் தெரிவித்த போதிலும் பணம் உடனடியாக வழங்காவிட்டால் எதிர்வரும் மாதங்களில் சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்பட மாட்டாது என தெரிவித்து வலுக்கட்டாயமாக குறித்த பணத்தினை பெற்றுள்ளார்.

பணத்தை வழங்கிவிட்டு தொலைபேசி ஊடாக அயலவர்களுக்கு தெரிவிக்கலாம் என முயற்சித்த போது தனது பெறுமதியான கையடக்க தொலைபேசி ஒன்றும் அங்கிருந்து களவாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பிரதேச செயலகத்திலிருந்து பதிவினை மேற்கொள்ள வருவதாக தெரிவித்து பல பண மோசடிகள் இடம் பெற்றுள்ளன. 

எனவே இவ்விடயம் தொடர்பில் பொதுமக்களை மிக அவதானமாக இருக்குமாறு பிரதேச செயலர் மற்றும் கிராம சேவையாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

No comments