சுவிசில் நடைபெற்ற உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் 8 ஆண்டு போட்டிகள்

சுவிட்சர்லாந்து தலைநகர் பேர்ண் நகரில் கடந்த 8ஆம் 9ஆம் திகதி இரண்டு நாட்கள் உலகத்தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின் 8வது ஆண்டு  பூப்பந்தாட்ட

சுற்றுப் போட்டி சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. 

இதில் அவுஸ்திரேலியா தொடக்கம் அமெரிக்கா வரையிலான தமிழ் மக்களின் பூப்பந்தாட்ட விளையாட்டு வீரர்கள் சிறுவர்கள் முதல் 70 வயதுக்கு மேற்பட்டோர் வரை ஆண்கள், பெண்கள் என இருபாலாறும் கலந்து சிறப்பித்துள்ளனர். 

இந்நிகழ்வு, கடந்த 08.04.2023 அன்று காலை 8 மணிக்கு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வு  கொடிய போரினால் உயிரைத் தியாகம் செய்தவர்களுக்காகவும் பொது மக்களுக்காகவும் மௌன பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.  கலாநிதி அகளங்கன் இயற்றிய தமிழ்த்தாய் கீதத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானதோடு, உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் தலைவர் தங்கராஜா சிவசிறி, தலைமை உரையாற்றி  அனைத்து வீரர்களையும் வரவேற்று உற்சாகம் ஊட்டினார்.

போட்டிகள் அனைத்தும் 24 விளையாட்டு தளங்களைக் கொண்ட ஒரே விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த மைதானத்தினை பெற்றுத்தருவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்து, அதற்குப் பொறுப்பாக இருந்த சுவிஸ் நாட்டு விளையாட்டுத்துறையின் உயர் நிர்வாகிகளான தோமஸ் அவரது துணைவியார் பிறிஸ்கா ஆகியோர் மிகவும் நன்றியுடன் அனைவராலும் பாராட்டப்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, இந்த போட்டியினை  தலைமைதாங்கி நடாத்திய  ரோமான், போட்டி தொடர்பான விசேட விடையங்களை வீரர்களுக்கு விளக்கியதைத் தொடர்ந்து,  உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் ஸ்தாபகர் கந்தையா சிங்கம் சிறப்பு உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து தாயகத்தில் இருந்து வருகை தந்திருந்த முன்னாள் யாழ். மேயர் ஆனோல்டும்  உரை நிகழ்த்தியுள்ளார். 

2014ஆம் ஆண்டு முதல் உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றி வரும் கனடா நாட்டைச் சேர்ந்த ஸ்ரீ நாராயணதாசும் இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாகக் கலந்து சிறப்பித்துள்ளார். 

250மேற்பட்ட  போட்டியாளர்கள் பங்குபற்றிய இந்த மாபெரும் உலக கிண்ண போட்டிகள்  மிகவும் பெறுமதியானதாகவும், உலகமெங்கும் பரவிவாழும் தமிழ் வீரர்களை ஒன்று திரட்டக்கூடியதுமாக இருந்தது.

அத்தோடு குறிப்பாக இந்த வருடம் தமிழ் மக்கள் அல்லாதவர்களும் கலந்து கொள்கின்ற சர்வதேச சமூகத்தினருக்கான சிறப்புப் பிரிவும் இடம்பெற்றுள்ளது. இதில் சர்வதேச தரத்தில் இருக்கும் பலர் போட்டிகளில் கலந்து சிறப்பித்துள்ளனர். சுமார் 15 மணிக்குப் போட்டிகள் யாவும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வெற்றிக் கிண்ணங்கள், பதக்கங்கள், பணப் பரிசில்கள் என வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு வைபவம் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் வரை நீடித்தது.

மேலும், விளையாடு வீரர்கள் அவர்கள் உறவினர்கள் என சுமார் 400 பேர்வரை சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட வேறு ஒரு மண்டபத்தில் ஒன்றுகூடி, இரவு உணவினை உண்டு களித்து ஆடிப்பாடி மனமகிழ்ந்துள்ளதுடன் 8ஆவது WTBT-2023 போட்டி நிகழ்வு இனிதே நிறைவடைந்துள்ளது.



No comments