வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த போது தீயனை அணைக்க யாழ்.மாநகர சபை முற்பணம் கோரியதா ?


P
யாழ்.மாநகரப் பகுதியில் தீயணைப்புக்காக அவசர உதவி கோரியபோது பணம் செலுத்தினால் மட்டும் வர முடியும் என யாழ்.மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் குறித்து உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என யாழ்.மாநகர ஆணையாளர் ஜெயசீலன் தெரிவித்தார்.

யாழ்.சுண்டுக்குளி பகுதியில் நேற்றைய தினம் வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைப்பதற்கு யாழ்.மாநகர சபைத் தீயணைப்புப் பிரிவுக்கு தொலைபேசி அழைப்பு எடுக்கப்பட்ட நிலையில், மாநகர சபைக்கு நேரில் வந்து பணம் கட்டினால் தான் வர முடியும் என உத்தியோகத்தர் ஒருவரால் தெரிவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன. அது தொடர்பில் ஆணையாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார். 

மாநகர சபையின் தீர்மானத்தை அடிப்படையாக கொண்டு தீயணைப்பு சேவைக்கு, கட்டண அறவீடு நடைமுறைப்படுத்தப்படுகின்ற நிலையில் முற்பணம் கட்ட வேண்டிய தேவையில்லை.

இவ்வாறான நிலையில் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் தவறான கருத்தை கூறியதாக எனக்கும் தகவல் கிடைத்தது. 

ஆகவே குறித்த உத்தியோகத்தர் பதிலளித்த விதம் தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.






No comments