நாடாளுமன்ற முடிவை மீறிய சட்டக் கல்லூரி அதிபர்


மாணவர்களை அவரவர் தாய்மொழியில் பரீட்சை எழுத அனுமதிப்பது தொடர்பாக நாடாளுமன்றம் எடுத்த தீர்மானத்தை மீறி சட்டக்கல்லூரி அதிபர் செயற்பட்டுள்ளார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

நாடாளுமன்றத்தின் தீர்மானத்தை மீறி சட்டக்கல்லூரி அதிபர் செயற்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அத்தோடு சட்டக் கல்லூரியின் அதிபரை சலுகைகள் மற்றும் நெறிமுறைகள் தொடர்பான குழுவின் முன் அழைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார முன்மொழிந்துள்ளார்.

சமீபகாலமாக சட்டக் கல்லூரி பரீட்சையை ஆங்கிலத்தில் நடத்துவதற்கு ஆளும் கட்சி மற்றும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆங்கிலத்தில் பரீட்சைகளை நடத்துவதற்கான ஒழுங்குமுறை விதிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்ட நிலையில் பரீட்சைகளை ஆங்கிலத்தில் நடத்த முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே மேலும் சட்டக்கல்லூரி அதிபர் சிங்களம் மற்றும் தமிழில் சட்டப் பரீட்சைகளை நடத்துவதற்கு எதிராக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments