மக்களின் போராட்ட உரிமையை சீர்குலைத்த பல நாடுகளில் இலங்கையும் ஒன்று!


மக்களின் போராட்ட உரிமையை சீர்குலைத்த பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளில் இலங்கையும் ஒன்று என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் பிராந்திய மனித உரிமைகள் தாக்கத்துக்கான சிரேஷ்ட பணிப்பாளர் டெப்ரொஸ் முச்செனா தெரிவித்தார்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்ற சர்வதேச மன்னிப்புச் சபையில் வருடாந்த அறிக்கையின் பிராந்திய வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பற்றிய விவாதம் உங்கள் அரசாங்கத்துக்கும் உங்களுக்கும் இடையில் விவாதிக்கப்படுவதை நாங்கள் அறிவோம் என்று தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை கோருகிறது என்றும் கலந்துரையாடப்படும் அனைத்தும் பொது வரம்புக்குள் இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

எந்தவோர் உதவிப் பொறிமுறையும் மனித உரிமைகளைக் குறைக்கக் கூடாது என்பதால் சமூகப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் மனித உரிமைகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி மனித உரிமைகள் மீது பேரழிவான தாக்கத்தை ஏற்படுத்தியதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் வருடாந்த அறிக்கை கண்டறிந்துள்ளது என்றும் மனித உரிமைச் சட்டத்தை தெற்காசிய நாடுகள் கையாளும் விதமும் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டார்.

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் மனித உரிமைகள் நிலவரத்தை கருத்தில் கொண்டு, நாட்டின் 22 மில்லியன் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கான அவசரத் தேவை காணப்படுவதாகவும் குறிப்பிட்டார். 

இலங்கையில் மோசமான பொருளாதார நிலைமைக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், அரசாங்கம் எதிர்ப்பின் மீதான ஒடுக்குமுறையை தீவிரப்படுத்தியதாக இலங்கை குறித்த பிரிவில் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான ஒன்றுகூடல் உரிமைகள் சட்ட அமலாக்க முகவர்களால் கடுமையான தாக்குதலுக்கு உட்பட்டுத்தப்பட்டதாகவும் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

உள்நாட்டு ஆயுத மோதலின் போது மேற்கொள்ளப்பட்ட கடுமையான மனித உரிமை மீறல்கள் கவனிக்கப்படாமல் இருந்ததாகவும் பலவந்தமாக காணாமல் போனவர்களின் குடும்பங்கள் உண்மையையும் நீதியையும் தேடுவதாகவும் சபை தெரிவித்துள்ளது.

No comments