வவுனியா போராட்டத்திற்கு மாவை அழைப்பு


வவுனியாவில் நாளை இடம்பெறும் மாபெரும் போராட்டத்துக்கு இன, மத, கட்சி பேதம் பாராது அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் வெடுக்குநாறி மலை விடயம் மாத்திரமல்லாது, வடபகுதியில் உள்ள ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் நாம்  எமது குரல்களை எழுப்ப வேண்டும் என்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

யாழ்ப்பாண தமிழரசு கட்சி அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்  போதே  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர், “தமிழரசுக் கட்சியின் மாநாடு அதையொட்டி கிளைகள் அமைப்பு விடயங்கள் முடிந்தவுடன் விரைவில் நடைபெற இருக்கின்றது. அந்த மாநாடு தான்  பொறுப்புக்கும் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதை தீர்மானிப்போம்.

அந்த மாநாட்டின் போது கிளைத் தலைவர் மாவட்ட தலைவர் பதவி தெரிவு செய்யப்பட்டு அதன் பின்னர் தலைவர் தெரிவிக்கவும் இடம்பெறும் அது தொடர்பில் தற்போது நாங்கள் பேச வேண்டியதில்லை. அந்த மாநாடு முடிவடைந்த பின்னர் அடுத்த தலைவர் யார் என்பது தீர்மானிக்கப்படும்.

அதேபோல் வடக்கு நாரை மலையில் ஆதிலிங்கம் உட்பட விக்கிரகங்கள் அழிக்கப்பட்டமை தொடர்பில் நேற்றைய தினம் (முன்தினம்) ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்கவுடன் தொலைபேசியில் உரையாடியிருந்தேன்.

அவர் குறித்த விடயம் தொடர்பில் விவரமாக தனக்கு அனுப்பி வைக்குமாறு கோரி இருந்தார். அதன் அடிப்படையில் நேற்றிரவு (முன்தினம் இரவு) அவசரமாக அவருக்கு கடிதம் மூலம் உள்ள பிரச்சனைகளை தெளிவாக எழுதி இருக்கின்றேன். 

அதேபோல, வவுனியாவில்  நாளை மாபெரும் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த போராட்டத்தில் நாங்கள் அனைவரும் கலந்து கொண்டு எமது எதிர்ப்பினை வெளிப்படுத்த வேண்டும்” என்றார்.

No comments