முள்ளிவாய்காலுக்குப் பின்னர் மீண்டும் இணைந்த துறைசார் வல்லுனர்கள்


அது ஈழத்தின் வசந்தகாலம். நிழல் அரசொன்றின் தலைமுத்துவத்தின் கீழ் அதன் அணுசரனையில் அரவணைப்பில் ஒழுங்கிணைக்கப்பட்ட முயற்சியில் புலத்தில் உலகெங்கும் பரந்திருந்த பல்துறைசார் வல்லுனர்களும் வன்னியில் குவிந்தகாலம்.

தமது மக்களின் முன்னேற்றத்தில் தமது தேசத்தின் அபிவிருத்தியில் தங்களால் ஆன பங்களிப்பிற்காக அவர்கள் திரண்ட காலம் அது. 2002 இல் இருந்தான அச்செற்பாடுகளின் பரிணாமவளர்ச்சியும் அதன் உலகளாவிய முன்னெடுப்புகளும் ஒரு பெரும் வரலாறு. இம்முயற்சிகளும் முள்ளிவாய்காலில் வைத்து சிதைக்கப்பட்டதன் பின் தலைமைத்துவமும் இன்றி ஒருங்கிணைப்பும் இன்றி அவை தேக்கநிலையை அடைந்தன.

இந்நிலையில் 2021 சனவரியில் யாழ். பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த எம் மக்கள் இனப்படுகொலை நினைவாலயம் இடித்தழிக்கப்பட்டபோது புலத்தில் கனடாவின் பிராம்டன் நகரில் நகரசபை பிரதான பூங்காவில் ஒரு தமிழினப்படுகொலை நினைவாலயம் அமைக்கும் வாய்ப்புக்கிட்டிய போது அதை மையப்படுத்தி மீண்டும் ஒரு வாய்ப்பாக அத்துறைசார் வல்லுனர்கள் இணையும் வாய்ப்பு ஏற்ப்படுத்தப்பட்டது.

அவர்களின் முழுமையான பங்களிப்புடன் அமைந்த தமிழ் இனப்படுகொலை நினைவாலய அமைப்பு அவர்களால் நன்கு திட்டமிடப்பட்டு உலக வரைகலை அமைப்பான பீ பிரிடேர்ஸ் இன் அனுசரணையைப் பெற்று உலகளாவிய தமிழ் இனப்படுகொலை நினைவாலயம் ஒன்றிற்கான வடிவத்தை முதன்மைப்படுத்திய ஒரு வரைகலைப் போட்டியை உலகளாவி நடத்தினர். அப்போட்டிக்கான செலவுகள் மற்றும் வெற்றியாளர்களுக்கான 10 ஆயிரம் யூரோ பணப்பரிசில்கள் என அனைத்தையும் அந்நிறுவனமே பொறுப்பேற்க நடாத்தப்பட்ட போட்டியில் உலகின் பல முதன்மை நாடுகள் உட்பட பல நாடுகளில் இருந்து 100க்கும் மேற்ப்பட்ட வரைகலை போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

பீ பிரீடேர்ஸ் என்ற அச்சர்வதேச அமைப்பின் உலகளாவிய வல்லுனர்கள் அறுவர் அதில் 40 சிறந்த வரைகலைகளைத் அதில் இருந்து தெரிவு செய்தனர். அவை தமிழ் இனப்படுகொலை நினைவாலய அமைப்பிடம் கையளிக்கப்பட்டன. தமிழ் இனப்படுகொலை அமைப்பின் நிர்வாக சபையால் தெரிவு செய்யப்பட்ட உலகளாவிய 13 தமிழ் பல்துறை வல்லுனர்கள் அவற்றை ஆய்ந்து தமது முதன்மைத் தெரிவுகளை வரிசைப்படுத்தி வழங்க அவை தொகுக்கப்பட்டு முதல் இடத்தில் இருந்து ஏனைய இடங்களிற்கானவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

இச்செயற்பாடு தமிழ் இனப்படுகொலையை தமிழரல்லாத துறைசார் வல்லுனர்கள் மத்தியில் மட்டுமல்லாது உயர்கல்வி நிறுவனங்கள் வரை கொண்டு சேர்த்தது மட்டுமன்றி புலத்தில் பிhரம்டன் நகரைக் கடந்தும் உலகளாவி தமிழ் இனப்படுகொலை நினைவாலயங்களை அமைப்பதற்கான வடிவத்தையும் அதற்கான பொறியியல் மற்றும் தொழில்நுட்ப விபரங்களையும் பெற்றுத்தந்துள்ளது.

இதனை மையமாகக்கொண்டு அதில் தமிழ் இனப்படுகொலையின் பல விபரங்களையும் தொழில்நுட்பம் சார்ந்து பலமொழி இணையம் மற்றும் ஆவணங்கள் உட்பட ஒருங்கமைக்கும் பணியையும் எமது வல்லுனர்கள் சிறப்பாக முன்னெடுத்துள்ளனர்.

பேராசிரியர்கள், பொறியியலாளர்கள் முகாமைத்துவ நிபுணர்கள் வரைகலை நிபுணர்கள் இளையவர்கள் பெண்கள் என பலதுறை வல்லுனர்களின் மீண்டும் ஒரு தாழில்நுட்ப ஒருங்கிணைப்பு தொடர்ந்தும் வலிகளையே சுமந்து நிற்கும் ஈழத்தமிழினத்திற்கு நிச்சயமாக ஒரு நிவாரணியாகும். இதில் பலர் வன்னியில் தொடர்ந்த பல்துறைசார் தொழில்நுட்ப முன்னெடுப்புகளின் ஒருங்கிணைப்பாளர்களாக தலைமையின் உச்சமான நேசத்திற்கு உரியவர்களாக திகழ்ந்தவர்கள். தற்போதைய தமிழ் இனப்படுகொலை நினைவாலய முன்னெடுப்புகளை விபரிக்கிறது இங்கு இணைக்கப்பட்டுள்ள ஆங்கில விபரணக்குறும்படம்.

No comments