பொன்னாவெளி :அரசின் புழுகுமூட்டை!



அண்மைய நாட்களிலே கிளிநொச்சியில் சீமெந்து தொழிற்சாலை ஒன்றை அமைக்கவுள்ளதாகத் தெரிவித்து மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வீடு கட்டி தருகின்றோம், வீதி போட்டு தருகின்றோம், பல்வேறு உதவிகளை செய்கின்றோம் எனக்கூறி ஒரு கும்பல் பூநகரி பொன்னாவெளி பகுதியில் மக்களிடமிருந்து வெற்றுப் பேப்பர்களில் கையெழுத்துக்களை வாங்குகின்றனர்.

பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பொன்னாவெளி என்ற கிராமத்தின் மிகப்பெரிய வளமான முருகைக்கற்களை அகழ்ந்தெடுத்து அந்த இடத்தில் பாரிய சீமெந்து தொழிற்சாலையை அமைப்பதற்காக டோக்கியோ சீமெந்து நிறுவனம் முயற்சித்து வருகின்றது.

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு இல்லை. மக்களிற்கான நியாயமான அபிவிருத்தி இல்லை. தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் நிலத்தை ஆக்கிரமித்தும், விகாரைகளையும் அமைக்கின்ற அதேவேளை தொழிற்சாலை அமைத்தல் என்ற மாயையை தோற்றுவித்து அந்த பகுதியில் மக்கள் வாழ முடியாதவாறு இடம்பெயர்க்கின்ற மிகப்பெரிய காரியத்தை இலங்கை அரசு துல்லியமாக கையாள்வதாகவும் சிவஞானம் சிறீதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதனிடையே யாழ்ப்பாணம் சிங்கள மகா வித்தியாலயப் பாடசாலை கட்டடம் முழுமையாக இராணுவத்திற்கு கைமாற்றப்படுகின்றது.

1995 ஆம் ஆண்டிற்கு பின்பு படையினர் யாழ். குடாநாட்டை கைப்பற்றியது முதல் இராணுவத்தின் 512ஆவது பிரிகேட் படை முகாமாக செயற்பட்டு வருகின்றது.

அவ்வாறு முகாமாக இயங்கும் பாடசாலைக்கட்டடத்தை பாதுகாப்பு அமைச்சு இராணுவத்தினரிற்கே நிரந்தரமாக கையளிக்குமாறு கோரியதன் பெயரில் சுற்றுலா மற்றும் காணி அமைச்சு பாடசாலையை கையளிக்குமாறு கல்வி அமைச்சை கோரியுள்ளது.அதனை தொடர்ந்தே பாடசாலையை படைமுகாமிற்கு வடமாகாண கல்வி அமைச்சு கையளித்துள்ளது.


No comments