காலை 7மணிக்கே அறிவு வருமாம்!



வடமாகாண பாடசாலைகளில் பரீட்சைகள் தொடர்பில் நாளை காலை 7மணிக்கே தீர்மானிக்கப்படுமென வடமாகாண கல்விப்பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் பணிப்புறக்கணிப்பில்  ஈடுபடவுள்ளதால் வடமாகாணத்தில் நாளை புதன்கிழமை நடைபெறவிருந்த பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா. புவனேஸ்வரன் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, வடமாகாண கல்வித் திணைக்களத்தால் நாளை நடைபெறவுள்ள பரீட்சைக்கான வினா பொதிகள் எவையும் வலயக் கல்வித் திணைக்களங்களுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை எனத் தெரிய வந்துள்ளது. ஆகையால் மாகாண ரீதியிலான பரீட்சைகள் நடைபெறுவதற்கான சாத்தியம் இல்லை  எனவும் அவர் தெரிவித்தார்.

இதேநேரம் சில மாகாணக் கல்வி அமைச்சுகள் நாளை பாடசாலைகள் நடைபெறாது என அறிவித்துள்ள நிலையில் வடக்கு, கிழக்கு மாகாண கல்வி அமைச்சோ, கல்வித் திணைக்களமோ எந்த அறிவித்தல்களையும் வெளியிடவில்லை.

இதேவேளை வடக்கு, கிழக்கு, மலையகம் வடமத்திய மாகாணம் உள்ளிட்ட தமிழ்பேசும் அதிபர், ஆசிரியர்கள் கடமையாற்றும் பிரதேசங்களில் உள்ள பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாக கடமைக்குச் செல்லாது பணிப்புறக்கணிப்புச் செய்வதென உறுதியளித்துள்ளதாகவும் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.


இதுதொடர்பாக மாகாண கல்விப் பணிப்பாளரிடம் தொடர்பு கொண்ட போதும் அவர் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments