யாழில். மூன்று பொலிஸ் பிரிவுகளில் இரு மணிநேர இடைவெளியில் மூன்று மோட்டார் சைக்கிள் திருட்டு!


யாழ்ப்பாணத்தின் மூன்று பொலிஸ் பிரிவுகளில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரண்டு மணி நேர இடைவெளிக்குள் மூன்று மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் பகுதியில் ஊடகவியலாளர் ஒருவர் தனது சக ஊடக நண்பனின் மோட்டார் சைக்கிளை வாங்கி கொண்டு வீடு சென்று தனது வீட்டின் முன்பாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு உள்ளே சென்று திரும்பும் சில நிமிட இடைவெளியில் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளது. 

அது தொடர்பில் CCTV காணொளிகளை ஆராய்ந்த போது , பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் , வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளை களவாடி செல்வது பதிவாகியிருந்தது. 

உடனடியாக காணொளி பதிவுகளுடன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டினை அடுத்து பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்ட வேளை நேற்றைய தினம் இரவு உடுவில் லவ் லேன் பகுதியில் இலக்க தகடு அற்ற மோட்டார் சைக்கிள் ஒன்றினை வீதி சோதனையில் ஈடுபட்டு இருந்த சுன்னாக பொலிஸார் மறித்த போது , நிற்காது ஓடியவர்களை பொலிஸார் துரத்தி சென்றவேளை மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பி சென்றுள்ளனர். 

அதனை அடுத்து மோட்டார் சைக்கிளை மீட்ட சுன்னாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது, நாச்சிமார் கோவிலடியில் களவாடப்பட்ட ஊடகவியலாளரின் மோட்டார் சைக்கிள் என கண்டறிந்துள்ளனர். 

அது தொடர்பில் ஊடகவியலாளருக்கு தகவல் தெரிவித்த பொலிஸார்  மேலதிக நடவடிக்கையின் பின்னர் மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிளை யாழ்ப்பாண பொலிஸாரிடம் பாரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 

அதேவேளை , சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோண்டாவில் பகுதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் களவாடப்பட்டுள்ளது. அது தொடர்பில் சுன்னாகம்  பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

அத்துடன் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலும் மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

குறித்த மோட்டார் சைக்கிள்களை கும்பல் ஒன்று திட்டமிட்டு திருடி சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட முனைந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகித்துள்ளனர். 

சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

இதேவேளை புத்தூர் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் பெண்ணொருவரின் மோட்டார் சைக்கிளுக்குள் இருந்த உடைமைகள் களவாடப்பட்டுள்ளது. 

மோட்டார் சைக்கிள் இருக்கைக்கு கீழ் வைக்கப்பட்டு இருந்த இரண்டு கைத்தொலைபேசிகள் , வங்கி அட்டைகள் , அடையாள அட்டை , சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் பணம் என்பவை களவாடப்பட்டுள்ளது. 

அது தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments