சீனாவிடம் இருந்து நிதி உத்தரவாதம்


சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை செய்து கொண்ட ஊழியர் ஒப்பந்தம் எதிர்வரும் 20ஆம் திகதி, நிறைவேற்று சபையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என அதன் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

சீனா, இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் உள்ளிட்ட இலங்கையின் முக்கிய கடன் வழங்குநர்களிடமிருந்து நிதி உத்தரவாதங்களைப் பெறுவதிலும், தீர்க்கமான கொள்கை நடவடிக்கைகளை எடுப்பதிலும் இலங்கை அதிகாரிகள் அடைந்துள்ள முன்னேற்றத்திற்கு அவர் பாரும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கைக்கு நிதியுதவி வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் அங்கீகாரம் கிடைத்ததன் பின்னர், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட ஏனைய தரப்பினரிடம் இருந்து கடனுதவி பெறும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைக்கும் என சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது.

இதற்கிடையில், நாட்டின் கடனை மறுசீரமைப்பதற்காக இருதரப்பு கடன் வழங்குபவர்களிடம் இருந்து 10 முதல் 15 ஆண்டுகள் வரை சலுகையை சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், சீனாவிடம் இருந்து இலங்கைக்கு 2 வருட காலநீடிப்பே வழங்கப்பட்டது.

இதேவேளை இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கான சீனாவின் எழுத்துமூல உத்தரவாதம் சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments