தபால் வாக்களிப்பிற்கு தயார்:சபைகள் கலையுமா?தேர்தல்கள் பற்றிய இழுபறிகளின் மத்தியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு பெப்ரவரி 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் இடம்பெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன் பிரகாரம் தபால் மூல வாக்களிப்பிற்கு தயாராகுமாறு வடகிழக்கிலுள்ள அரச அலுவலகங்களிற்கு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களால் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தேர்தலிற்கு முன்பதாக உள்ளுராட்சி சபைகளை கலைத்துவிடுமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள போதும் அரச தரப்பில் மௌனம் காக்கப்பட்டுவருகின்றது.

இதனிடையே இலங்கையில் உள்ள உள்ளூராட்சி சபைகள் தொடர்பில் கடந்த நான்கு வருடங்களில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதற்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார்.

அதன் போது, உள்ளூராட்சி சபைகளின் தலைவர் மாத்திரம் மோசடி மற்றும் ஊழலில் ஈடுபட்டமை அறியக்கிடைத்தால், அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்றும், முழு சபையின் அங்கீகாரத்துடன் ஊழல் மோசடி இடம்பெற்றிருந்தால், முழு சபையுமே கலைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைகளை கலைக்கும் அதிகாரம் மாகாண ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைவாக ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான உள்ளூராட்சி சபைகளை கலைப்பது தொடர்பாக ஆளுநர்களுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் ஜானக வக்கம்புர  குறிப்பிட்டுள்ளார்.


No comments