ஒருபுறம் விடுவிப்பு: மறுபுறம் பிடிப்பு?



யாழ்ப்பாணத்தின் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து சுமார் 108 ஏக்கர் காணி 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 35 வருட ஆக்கிரமிப்பின் பின்னராக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளது. 

பலாலி - அந்தனிபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் காணி விடுவிப்புக்கான உத்தரவு பத்திரத்தினை யாழ்.மாவட்ட இராணுவ தளபதியான மேஜர் ஜெனரல் சுவர்ண போதோட்ட, யாழ்.மாவட்டச் செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனிடம் கையளித்துள்ளார்.

இதனிடையே வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான அக்கரை சுற்றுலாக் கடற்கரையில் கடற்படையினர் கைபற்ற இன்று மேற்கொண்ட முயற்சிகள் பற்றி தகவல்கள் வெளிவந்துள்ளது.

இலங்கை கடற்படையினர் காணியை அடையாளப்படுத்துதல் மற்றும் அளவீடு செய்யும் முயற்சியில் ஈடுபட்டமை தொடர்பில் தகவல் கிடைத்த நிலையில் அவ்விடத்திற்கு தவிசாளர் தியாகராஜா நிரோஸ் செல்வதற்கிடையில் கடற்படையினர் அவ்விடத்தில் இருந்து விலகிச் சென்றுள்ளனர்.

தொண்டமனாறு அக்கரை பகுதியில் இலங்கை கடற்படையினருக்கு பிரதேச சபையின் காணியை தான் வழங்கியுள்ளதாக பிரதேச செயலாளர் அறிவித்திருந்தார். அவ்வாறாக அறிவிப்புக் கிடைத்தவுடன் அவ்வாறாக காணியை வழங்க முடியாது என நான் மறுத்திருந்தேன்.  இந் நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இரகசியமாக பிரதேச சபைக்குச் சொந்தமான சுற்றுலா வலயத்திற்குள் நுழைந்த கடற்படையினர் அளவீடுகளை மேற்கொண்டு புகைப்படங்களையும் எடுத்துள்ளதாக தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்துள்ளார்.

அடிப்படையில் அந்நிலம் உள்ளுராட்சி மன்றத்தின் ஆட்சியில் காணப்படும் நிலம். பிரதேச செயலாளர் காணிகளை இராணுவத்திற்’கு வழங்குவதற்கு முடிவுகளை எடுக்க முடியாது. மேலும் மில்லியன் கணக்கில் எம்மால் முதலீடு செய்யப்பட்டுள்ள சுற்றுலா வலயம் ஒன்றை இராணுவமயப்படுத்த முடியாது. எமது மக்களின் காணிகளை விடுப்பதாக அரசாங்கம் கூறுகின்றபோதும் காணிகளை அபகரிப்பதிலும் இராணுவமயமாக்கத்தினை முன்னொண்டு செல்வதிலும் அரசாங்கம் தீரம் காட்டியே வருகின்றது என வலி கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். 


No comments