சர்ச்சைக்குரிய 13வது திருத்தமும் பாதுகாப்ப உத்தரவாதமும் ! பனங்காட்டான்


1987ன் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் வழியாக அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்ட 13ம் திருத்தம், மாகாண சபை முறைமைக்கு மட்டுமானதல்ல. ராஜீவும் - ஜே.ஆரும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பின்னர், இணைப்பு ஆவணம் என்ற பெயரில் ஒன்றை பரிமாறிக் கொண்டனர். இதில் இலங்கையின் பாதுகாப்பையும், வெளிநாட்டு சக்திகளிலிருந்து இலங்கையை காப்பாற்றுவதையும் இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது என்பது மூலவாசகம். இப்போது 13ம் திருத்த நடைமுறையை எதிர்ப்பவர்கள் அந்த இணைப்பு ஆவணத்தை ஒரு தடவை படித்துப் பார்ப்பது நல்லது.

இலங்கை அரசியலை மையப்படுத்தி, உள்நாட்டில் பல காரியங்கள் இப்போது இடம்பெறுகின்றன. இவை ஓரளவுக்கு எதிர்பார்க்கப்பட்டவையும்கூட. 

வெளிநாடுகளிலும் சில விடயங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றில் முக்கியமானதாக ஐக்கிய நாடுகள் மன்றில் இலங்கை மீது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை அங்கத்துவ நாடுகள் பட்டியலிட்டு வலியுறுத்தி வருகின்றன. 

இந்தியா தனது பங்குக்கு 13ம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும், மாகாண சபைகளுக்கான தேர்தல்களை தாமதமின்றி நடத்த வேண்டுமெனவும் இங்கு கோரியுள்ளது. 

அடுத்த மாதம் 9ம் திகதி நடைபெற வேண்டிய உள்ளூராட்சித் தேர்தல், நிச்சயமாக இடம்பெறுமா என்பதை அதற்கு முதல்நாளான 8ம் திகதிவரை உறுதிபடச் சொல்ல முடியாத நிலைமையில், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது எவ்வாறு சாத்தியப்படுமென்று கேட்கத் தோன்றுகிறது. 

உள்ளூராட்சித் தேர்தல்களுக்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியாகிவிட்டதால் தேர்தல் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. முக்கியமாக, தமிழர் தாயகத்தில் 'தூள்' பறக்கும் மேடைப்பேச்சுகளும் நீயா நானா ஜனநாயகவாதி என்ற சவால்களும், 'அன்பான வாக்காள்' பெருமக்களுக்கு சில நாட்களுக்கு ரசிக்கவும் சுவைக்கவும் நல்ல தீனி கிடைத்துள்ளது. ஆரம்பமே இப்படியென்றால் அடுத்த முப்பது நாட்களும் குத்துவெட்டுகள், திடீர் தாக்குதல்கள், மாயமாற்றங்கள் மட்டுமன்றி சிலவேளை மறைமுக கொடுக்கல் வாங்கல்களும் (தமிழ்நாடுப் பாணியில்) இடம்பெறக்கூடும். 

இதற்கான நிதியை அள்ளிக்கொடுக்க சில வெளிநாடு (புலம்பெயர்) அமைப்புகள் தயாராகியுள்ளன. இதற்கெனவே வருடாந்த விருந்துகள், புதுவருட விருந்துகள், பொங்கல் விருந்துகள் என டிக்கட்டுகளுக்கு கொண்டாட்டங்களை நடத்தி வசூல் நடைபெறுவது நன்றாகத் தெரிகிறது. முன்னைய தேர்தல் காலங்களில் நடைபெற்றதன் தொடர்கதைதான். 

ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க இப்போது புது உருவம் எடுத்து, ''நான் சொன்னால் சொன்னதுதான்" என்ற பாணியில் தம்மைக் காட்சிப்படுத்த முனைப்புடன் செயற்படுகிறார். வடக்கே படையினர் வசமிருந்த தமிழர் காணிகளில் சில அடையாளமாக மீளளிக்கப்பட்டுள்ளன. அரசாங்க மற்றும் படைத்தரப்பினருடன் தமிழரசுக் கட்சியின் சில பிரமுகர்களும் இந்நிகழ்வில் பங்கேற்று, மேடையில் அமர்ந்து வரலாற்றுக்குப் பதிவு செய்துள்ளனர். 

சிறையிலிருந்த இரண்டு தமிழ்க் கைதிகள் இன்னோர் அடையாளமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சின்னத்திரை நாடகங்களின் பாணியில், 'இது தொடரும்' என்று ஆட்சித்தரப்பால் அறிவிக்கப்பட்டு வருகிறது. 

வாராது வந்த வாய்ப்பை தவறவிடக்கூடாது என்பதற்காக, 45 வருட அரசியலில் முதன்முறையாகக் கிடைத்த ஜனாதிபதி பதவியை அரிய சந்தர்ப்பமாக்கி, சுதந்திர தினக்(?) கொண்டாட்டத்தை ரணில் பயன்படுத்துகிறார். நாடு வங்குரோத்து நிலையிலிருந்தாலும், ஒவ்வொரு நாட்டிடமும் பிச்சைப் பாத்திரம் ஏந்தினாலும், இந்தக் கொண்டாட்டத்தை நடத்தாவிட்டால் சர்வதேசம் ஏளனமாகப் பார்க்கும் என்பதாகச் சொல்லி பல கோடி ரூபாவில் படையினரை வீதியுலாக் காட்டும் இந்த நிகழ்வு தேவைதானா என்று பலரும் கேட்கின்றனர். 

எதிர்பார்க்கும் சர்வதேச நிதியுதவி நிச்சயம் என்று அமெரிக்கா கூறிவிட்டது. 'நான் உங்கள் தோழன்' என்று இந்தியா அபயக்கரம் நீட்ட, 'நான் உன்னுடன்தான்' என்று சீனா கட்டியணைக்க - இவை இரண்டும் போதாதென்றால் காசு அடிக்கும் இயந்திரம் காத்துக்கிடக்கிறது. இந்த விண்ணாணத்தில் 75வது ஆண்டு நிறைவு நூறாண்டை நோக்கிப் பயணிப்பதாக ரணில் பிரகடனம் செய்துள்ளார். அதனாற்தான் போலும் அடுத்த 20 ஆண்டுகளுக்கு ரணிலே ஜனாதிபதி என்று அவரது சகாக்கள் உரக்கக் கூவுகின்றனர். 

மகிந்தவின் இரண்டு ஜனாதிபதி ஆட்சிக்காலம், சகோதரர்களும் பிள்ளைகளும் மந்திரிகள், பசில் அரசியல் மூளைசாலி - பின்னர் கோதா ஜனாதிபதி... அடுத்தது நாமல் ராஜபக்ச என்று, அடுத்த இருபது ஆண்டுகளுக்கு ராஜபக்ச குடும்ப ஆட்சி என்று கடந்த ஆண்டு ஆரம்பத்தில் பெரமுனக்காரர் மேளமடித்து குரல் கொடுத்தது காதுக்குள் இன்னும் ரீங்காரம் இடுகிறது. மொட்டின் மெட்டு இப்போது யானையின் பக்கத்துக்கு மாறியுள்ளது. 

இவை ஒருபுறமிருக்க, ரணிலின் 'தனிநல்லாட்சி' எப்படிப் போகிறது? 13 என்பது இவருக்கும் ஒரு கண்டமாகி வருவது போலவே தெரிகிறது. 

1987ம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் ராஜீவ்காந்தியும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அறுவடையே 13வது திருத்தம். இரு நாடுகளுக்கிடையிலான சட்டபூர்வமான இந்த ஒப்பந்தத்தை எந்தத் தரப்பும் இலகுவாக ரத்துச் செய்ய முடியாது. இந்த ஒப்பந்தம் கைச்சாத்தான அந்த வேளையிலேயே கணிசமான எதிர்ப்பும் உருவானது. தமிழீழ விடுதலைப் புலிகள் இதனை மனதாரவும் இலட்சியக் கொள்கை ரீதியாகவும் ஏற்கவில்லையென்பது அடிப்படையில் முக்கியமானது. 

சிங்களத் தரப்பைப் பொறுத்தளவில் அன்றைய பிரதமர் பிரேமதாசவும், தேசிய பாதுகாப்பு அமைச்சராகவிருந்த லலித் அத்துலத்முதலியும் பகிரங்கமாக எதிர்த்தனர். ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமது பதவியை ராஜினாமா செய்தார். ராஜீவ்காந்தியை கொழும்பு அணிவகுப்பில் கொலை செய்யும் முயற்சியும் இடம்பெற்றது. 

ஜே.வி.பி.யினர் நாடு தழுவிய ரீதியில் பல ஆர்ப்பாட்டங்களையும் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். இந்திய கர்ப்பூரம், திருநீறு, சந்தனம், வேட்டி-சால்வை விற்றவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழர் வணிக நிறுவனங்கள் பல நிர்மூலமாக்கப்பட்டன. 

13ம் திருத்தம் நாட்டின் பூர்வீக குடிகளான தமிழருக்கு தனியாட்சியை - தனிநாட்டை கொடுக்குமென சிங்கள தேசத்தில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. அப்போதைய ஜே.வி.பி.யினர் கைது, கொலை என்பவற்றையும் சந்தித்தனர். இன்றைய ஜே.வி.பி. திடீரென 13ம் திருத்தம் மாகாண சபை முறைமையை ஆதரிப்பாக அறிவித்திருப்பது அதிர்ச்சி வைத்தியமாகக் காணப்படுகிறது. 

13ம் திருத்தத்தின் முக்கிய அம்சங்கள் இரண்டு. அதிலொன்றுதான் மாகாண சபை முறைமை. இலங்கையில் மாகாண சபைகளை உருவாக்கவென 42ம் இலக்கச் சட்டம் 1987 நவம்பர் 14ம் திகதி நாடாளுமன்றத்தல் நிறைவேற்றப்பட்டது. வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபை 1988 இறுதியில் உருவானதாயினும், ஒன்றரை வருடத்தில் அகால மரணமானது. வடக்குக்கான தனி மாகாண சபைத் தேர்தல் 2013ல் நடைபெற்று, அதன் முதலாவது ஆட்சிக்கால முடிவில் அது இயற்கை எய்தியது. 

தமிழருக்கென உருவாக்கப்பட்ட வடக்கு கிழக்குக்கான மாகாண சபைகளின் அழிக்க முடியாத தடங்கள் இவை. இப்போது இனப்பிரச்சனைக்கு தீர்வு காணவென ரணில் கூட்டிய கட்சித் தலைவர்களின் மாநாட்டில், '13ம் திருத்தத்தை 'முழுமையாக' நடைமுறைப்படுத்துவேன்" என்று அவர் அறிவித்ததன் விளைவே இன்றைய களேபரத்துக்கான மூலகாரணம்.

இலங்கையின் ஒன்பது மாகாணங்களிலும் நிறுவப்பட்ட மாகாண சபை நிர்வாகம் கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக அரச தரப்பின் பின்கதவு ஏஜன்டுகளான ஆளுனர்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.  இதனை தேர்தல் மூலம் மீள நிறுவி முழுமையான அதிகாரங்களுடன் அதனை நடைமுறைப்படுத்தப் போவது என்பதே ரணிலின் அறிவிப்பு. ஷமுழுமையாக| என்பதானது, மாகாண சபைகள் சட்டத்தின் கீழான காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை அவற்றுக்கு வழங்குவது என்பதாகும். 

1988ம் ஆண்டிலிருந்து இதுநாள்வரை மாகாண சபைகள் இயங்கி வருகின்றனவாயினும், அவற்றுக்கு சட்டத்துக்கு உட்பட்ட காணி மற்றும் காவற்துறை அதிகாரங்கள் வழங்கப்படவில்லையென்பதை இதனூடாக விளங்கிக் கொள்ளலாம்.

1987ல் இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்ட வேளையிலும், 13வது திருத்தம் நாடாளுமன்றதில் நிறைவேற்றப்பட்ட போதும் அந்த அரசாங்கத்தின் ஓர் உறுப்பினராகவும் அமைச்சராகவும் - அன்றைய ஜனாதிபதி ஜே.ஆரின் பெறாமகன் (சொந்த மச்சாளின் மகன்) என்ற வகையிலும் மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க வேண்டுமென்ற தார்மிக கடமையும் உரிமையும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு உண்டு.  

இந்தப் பின்னணியில், இதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென ரணில் உண்மையாகவே எண்ணுகிறாரா, அல்லது இதனைப் பகிரங்கமாகக் கூறி சிங்களத் தரப்பின் எதிர்ப்பை லாபமாக்கி இதற்கு முடிவுகட்ட விரும்புகிறாரா என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும். கிழட்டு நரியை குள்ள நரி விஞ்சுமா? 

இச்சந்தர்ப்பத்தில்தான் எதிர்பார்த்தவாறு பூதங்கள் குகைக்குள்ளிருந்து வெளியே வருகின்றன. தமிழருக்கு காணி, காவற்துறை அதிகாரங்கள் வழங்க அனுமதிக்க மாட்டோமென விமல் வீரவன்ச - உதய கம்மன்பில கூட்டாளிகள் தங்கள் எதிர்ப்பை சூளுரைக்க ஆரம்பித்துள்ளனர். கோதாவை வீட்டுக்கு அனுப்பியதுபோல ரணிலையும் அனுப்புவது இலகுவென இவர்கள் எண்ணுகிறார்கள். 

கடற்படையின் முன்னாள் அட்மிரலான சரத் வீரசேகர முழுமூச்சுடன் ரணிலை எதிர்க்க ஆரம்பித்துள்ளார். கோதபாய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போது தமக்கு ஆதரவாக ஷவியத்மக| (அறிவாளிகள் குழு) என்ற பெயரில் தனிச்சிங்கள அணியொன்றை உருவாக்கினார். கடந்த பொதுத்தேர்தலில் இந்த அணியைச் சார்ந்த எட்டுப் பேர் வெற்றி பெற்றனர். இவர்களுள் அதிகூடிய வாக்குகளை கொழும்பு மாவட்டத்தில் பெற்ற சரத் வீரசேகர ராஜாங்க அமைச்சரனார். 

கப்டன் கொத்தலாவலை என்ற ராணுவ அதிகாரி யாழ்ப்பாணத்தில் கடமையாற்றியபோது விடுதலைப் புலிகளின் தளபதியாகவிருந்த கிட்டுவுடன் தொடர்பு கொண்டு கைதிகள் பரிமாற்றம் இடம்பெற்ற வேளையில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் ராணுவத் தளபதியாகவிருந்தவர் மேஜர் ஜெனரல் ஆனந்த வீரசேகர. ராணுவத் தளபதியாகவிருந்த கொப்பேகடுவவின் படுகொலை, ஜே.வி.பி.யினரின் படுகொலைகள் ஆகியவற்றில் சம்பந்தப்பட்டவரென பெயரிடப்பட்ட ஆனந்த வீரசேகர, ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் பௌத்த பிக்குவாக மாறி, அம்பாறையில் புத்தங்கல ஆனந்த தேரோவாக பெயர்சூடி, 2021ல் மரணமானார். இவரது இளைய சகோதரரே இந்த சரத் வீரசேகர என்பது இங்கு தவறாது குறிப்பிட வேண்டிய தகவல். 

சில தினங்களுக்கு முன்னர் கண்டிக்கு மகாநாயக்க தேரர்களிடம் ஆசி பெறச் சென்றார் ரணில். அங்கு அவர்களால் இவரிடம் ஒரு கடிதம் கையளிக்கப்பட்டது. '13ம் திருத்தத்தை எக்காரணம் கொண்டும் முழுமையாக அமல்படுத்தக்கூடாது" என்பது இக்கடிதத்தின் அச்சாரம். 

சிங்கள இனவாதிகள், கோதபாயவின் அறிவாளிகள், பௌத்த மகாசங்கங்கள் அனைத்தும் தனித்தனியாக 13ம் திருத்தத்தை முழுமையாக அமல்செய்யக்கூடாதென ஆரம்பித்துவிட்டன. இவர்கள் கூட்டாக களத்தில் குதிக்க வேண்டியதுதான் மிச்சம். 

ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்படும் 13ம் திருத்தத்தை இவர்கள் எதிர்க்கவில்லை. மாகாண சபை முறைமையையும் இவர்கள் எதிர்க்கவில்லை. காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களையே எதிர்க்கின்றனர். இதனை வழங்குவதால் தமிழருக்கு தனிநாடு கிடைத்துவிடுமாம்!

இவ்வாறு கூச்சல் போடுபவர்களுக்கு முக்கியமான விடயமொன்றை நினைவுபடுத்த வேண்டும். 13ம் திருத்தம் என்பது அரசியல் அமைப்பில் இடம்பெற்றுள்ள ஒன்று. இது நிறைவேற்றப்பட்ட பின்னர் இதுவரை - எட்டுத் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆக, மொத்தம் 21 திருத்தங்கள் இலங்கையின் அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ளன. 

இவ்வாறு சட்டரீதியாக அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ள இத்திருத்தம் 1987ன் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் வழியாக ஏற்படுத்தப்பட்டது. இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பின்னர், இணைப்பு ஆவணம் என்று சொல்கின்ற ஒன்றை பரிமாறிக் கொண்டனர். இலங்கையின் பாதுகாப்பையும், வெளிநாட்டு சக்திகளிலிருந்து இலங்கையை காப்பாற்றுவதையும் இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது என்பது இந்த ஆவணத்தின் மூலவாசகம். 

13ம் திருத்தத்தையும் மாகாண சபை முறைமையையும் மறுப்பவர்கள் நாடாளுமன்றத்தில் புதிதாக 22ம் இலக்க திருத்தத்தை கொண்டு வந்து நிறைவேற்றி 13ஐ நீக்கலாம் என்ற ரணிலின் ஆலோசனையின்படி செயற்பட விரும்புபவர்கள், இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் இணைப்பு ஆவணத்தில் கூறப்பட்டிருக்கும் இலங்கையின் எதிர்காலப் பாதுகாப்பை ஒரு தடவை சிந்திப்பார்களா?   

No comments