அதிகார பகிர்வின்போது மலையக மக்களும் உள்வாங்கப்படல் வேண்டும் - ஜுலி சங்


அதிகார பகிர்வின்போது மலையக மக்களும் உள்வாங்கப்படல் வேண்டும் என அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கிடம் மலையக அரசியல் அரங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வாக அரசியல் அதிகார பகிர்வு கொண்டுவரப்படும்போது மலையகத் தமிழ் மக்கள் ஒரு தரப்பாக ஏற்றுக் கொள்ளப்படுவதை அமெரிக்கா உறுதி செய்ய வேண்டும் என அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இடம் வலியுறுத்தியதாக மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.

அமெரிக்கத் தூதுவருடன், இன்று நுவரெலியாவில் இடம்பெற்ற சந்திப்பில் இந்த விடயங்களை எடுத்துரைத்ததாக, திலகராஜா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, மலையக மக்களது பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், அவற்றுக்கான தீர்வு திட்டம் தொடர்பிலும் அதற்கு அமெரிக்கா உதவி வழங்கும் வழிமுறைகள் குறித்தும் அமெரிக்கத் தூதுவரின் கவனத்தை ஈர்த்ததாக திலகராஜா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தீர்க்கப்படாதிருக்கும் மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்தும் அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டும்.

மலையக மக்களின் மிக முக்கிய பிரச்சினையாக இருக்கக்கூடிய அரசியல் அதிகாரப் பகிர்வு, நிர்வாக அதிகாரப் பகிர்வு ஆகிய இரண்டு விடயங்களிலும் கூடிய கவனத்தை செலுத்த வேண்டிய தேவை உள்ளதாகவும், அமெரிக்க தூதுவரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

அத்துடன், காணி, கல்வி, சுகாதார அபிவிருத்தி முதலான விடயங்களில் காட்டப்படும் பாரபட்சம் மற்றும் கட்டாய கருத்தடை முதலானவை குறித்தும் எடுத்துக் கூறப்பட்டதாக மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.

No comments