புலனாய்வாளர்களின் துப்பாக்கி சூட்டில் பெண் உயிரிழந்த சம்பவம் ; திட்டமிட்ட கொலையா ?
பொரள்ளை பிரதேசத்தில் யுவதி ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் பாதுகாப்பு தரப்பினரின் திட்டமிட்ட செயலா? என கைதிகளின் உரிமைகளுக்காக செயல்படும் தென்னிலங்கை அமைப்பு ஒன்று சந்தேகம் எழுப்பியுள்ளது.
பாதுகாப்புத் தரப்பினரின் துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி பொது மக்கள் உயிரிழப்பது இது முதல் தடவையல்ல என சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் செயலாளர் சுதேஸ் நந்திமால் சில்வா தெரிவிக்கின்றார்.
“எங்களுக்குத் தெரியும் காக்கி உடையணிந்த அதிகாரிகள் தமது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஒப்பந்தத்திற்கு கொலை செய்ய பழக்கப்பட்டுள்ளனர். இதுவும் இவ்வாறான ஒரு சம்பவமா என சந்தேகம் எழுந்துள்ளது.” என ஊடகங்களுக்கு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பொலிஸார், இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பிற்கு பொறுப்பானவர்களுக்கு எல்லையற்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனை அவர்கள் தவறாக பயன்படுத்துவதாகவும் சுதேஸ் நந்திமால் சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆகவே, கொலையாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி சரியான தண்டனை பெற்றுக் கொடுக்கும் வரை சிறை கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு என்ற அடிப்படையில் தாம் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னிற்பதாக சுதேஸ் நந்திமால் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பிலான தகவல்களைப் பெறுவதற்காக இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் இருவர் கடந்த 13 ஆம் பொரளை, வனத்தமுல்ல பிரதேசத்துக்குச் சென்றனர்.
இதன்போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் யுவதியொருவர் உயிரிழந்ததோடு, சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இரண்டு இராணுவப் புலனாய்வு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பொரளை யைச் சேர்ந்த மெலனி காஞ்சனா என்ற 25 வயதுடைய யுவதியே உயிரிழந்தவராவார்.
இந்நிலையில் குறித்த யுவதி உயிரிழந்தமைக்கு காரணமானவர்களுக்கு எதிராக தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்து, குறித்த யுவதியின் குடும்பத்தினர் மற்றும் சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் செயலாளர் சுதேஸ் நந்திமால் சில்வா ஆகியோர் இணைந்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்றைய தினம் முறைப்பாடு செய்துள்ளனர்.
Post a Comment