கிளிநொச்சி வாசியை கடத்தி , சித்திரவதை புரிந்து, தாக்கிய சாவகச்சேரி பொலிஸ் உத்தியோகஸ்தர்!


யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர், அவரது மனைவி மற்றும் மைத்துனருடன் இணைத்து தன்னை கடத்தி சென்று தாக்குதல் மேற்கொண்டதாக கிளிநொச்சியை சேர்ந்த நபர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். 

கிளிநொச்சி வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் குறித்த நபர் தான் தாக்குதலுக்கு இலக்கான சம்பவம் தொடர்பில் தெரிவிக்கையில், 

கடந்த சனிக்கிழமை தனது வீட்டிற்கு வந்த மைத்துனர் , கிளிநொச்சி கணேசபுரம் பகுதியில் உள்ள காணியை துப்பரவு செய்ய வேண்டும் என கூறி மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். 

சற்று தூரம் சென்றதும் வானில் செல்வோம் என கூறி வானில் ஏற்றினார். வானுக்குள் , பொலிஸ் உத்தியோகஸ்தர் சிவில் உடையிலும் , அவரது மனைவி மற்றுமொரு ஆண் இருந்தனர். வானுக்குள் வைத்து கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்தார்கள். 

வான் பரந்தன் பூநகரி வீதியில் பயணித்தது. அவ்வேளையில் " திருடிய பொருட்கள் எங்கே " என கேட்டு வானுக்குள் வைத்து சரமாரியாக தாக்கினார்கள். எனக்கு எதுவும் தெரியாது வலி தாங்க முடியாது கதறிய போதிலும் என்னை மிக மூர்க்கத்தனமாக தாக்கினார்கள். 

சிறிது நேரத்தில் நான் சுயநினைவை இழந்து விட்டேன். எனக்கு நினைவு திரும்பிய போது,  பொழுது சாய்ந்த நேரம் , திருநகர் பகுதிக்கு அண்மையாக உள்ள வாய்க்கால் பகுதியில் கிடந்தேன். 

கண்டல் காயங்கள் , நோ , விறைப்பு,  காதில் பாதிப்பு போன்றவற்றால் கிளிநொச்சி வைத்திய சாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறேன் என தெரிவித்தார். 

அதேவேளை , குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரின் வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெறுமதியான பொருட்கள் திருட்டு போயிருந்ததாகவும்,  அது தொடர்பில் எவ்வித பொலிஸ் முறைப்பாடும் இன்றி குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் தனிப்பட்ட ரீதியில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் , கிளிநொச்சி பகுதியில் உள்ள வீடொன்றினுள்ளும் , வர்த்தக நிலையம் ஒன்றினுள்ளும் அத்துமீறி நுழைந்து தேடுதல் நடத்தியதுடன் ,அங்கிருந்தவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டி இருந்தார் எனவும் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையிலையே , குறித்த நபரை கடத்தி சென்று மிக மோசமாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

No comments