மீனவ சமூகங்களுக்கிடையில் முரண்பாடு!



இலங்கை அரசிற்கான கோரிக்கைகளை யாழ்.ஊடக அமைய  சந்திப்பில் பகிரங்கமாக மீனவ அமைப்புக்கள் உள்ளிட்ட பொது தரப்புக்கள் முன்வைத்துள்ளன.

அரசுக்கு முன் வைக்கின்ற கோரிக்கைகள்

கிளிநொச்சி மாவட்டத்தின் கிராஞ்சி கிராமத்தில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத அட்டைப் பண்ணைகளுக்கு எதிராக அப்பகுதி சிறு மீனவர்கள் மற்றும் பெண்கள் தொடர்ச்சியாக 100 நாட்களாக போராட்டம் நடாத்தி வருகின்ற நிலையில் கடற்றொழில் அமைச்சர் திரு. டக்ளஸ் தேவாநந்தா நேற்று அதே இடத்திற்குச் சென்று ஒரு விழாவை ஏற்பாடுச் செய்து அட்டைப் பண்ணைகளுக்கான அனுமதிப் பத்திரங்களை வழங்கியிருப்பதானது மீனவ சமூகங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்துவதோடு, மத்திய அமைச்சர் ஒருவர் பக்கச்சார்பாக நடந்துக்கொள்கின்றார் என்பதை உறுதிப்படுத்துகின்றது. எனவே இதை நாம் வண்மையாகக் கண்டிக்கின்றோம். அமைச்சர் ஒருவர் எப்போதும் நடு நிலையாக செயற்பட வேண்டுமென வலிறுத்துகின்றோம்.


அந்த வகையில்…..

முறையற்ற வகையில் வட பகுதியில் மேற்கொள்ளப்படும் கடல் அட்டை பண்ணைகளை முற்றாகத் தடுத்து தங்கள் கைகளைக் கொண்டு அட்டைத் தொழிலில் ஈடுபடுகிறவர்கள் தங்கள் தொழிலை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.


சிறு மீனவர்களின் தொழில் பாதிக்காத இடங்களில் அட்டைப் பண்ணைகளை உருவாக்க வேண்டுமென்றால் மீனவர்களுடன் கலந்துரையாடியே இறுதித் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும். 


வட பகுதியில் மேற்கொள்ளப்படும் அனைத்து விதமான சட்டவிரோத மீன்பிடி முறைகளையும் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை கடற்றொழில் அமைச்சர் பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகின்றோம். 


தான் அமைச்சராகிய உடனேயே இந்திய இழுவைமடிகள் மற்றும் உள்ளுர் இழுவைமடிகளை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுவதாக பல மறை மீனவ மக்களுக்கு உறுதியளித்த அமைச்சர் உட்பட அரசாங்கம் இப் பிரச்சினையை தீர்ப்பதற்கு இதுவரை நிரந்தமான முயற்சிகள் எதையும்  மேற்கொள்ளவில்லை. எனவே இது தொடர்பாக கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.  


யாழ் மாவட்டத்திலே 1990ம் ஆண்டு இடம்பெயர்ந்த மக்கள் இன்றும் கூட 10க்கும் மேற்பட்ட நலன்புரி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். எனவே அவர்களை உடனடியாக மீள் குடியேற்றவதோடு காணி மற்றும் வீட்டு வசதிகள் இன்றி வாழுகின்ற உப குடும்பங்களுக்கான வீடு மற்றும் காணி வசதிகளைப் பெற்றுக் கொடுக்குமாறு வலியுறுத்துகின்றோம். 

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம்

மாவட்ட மீனவ ஒத்துழைப்பு, யாழ்ப்பாணம்

“அரும்பு” மாவட்ட பெண்கள் அமைப்பு - கிளிநொச்சி

வட மாகாண கடற்றொழிலாளர் இணையம்

“பூந்தளிர்”; மாவட்ட பெண்கள் அமைப்பு - யாழ்ப்பாணம்


No comments