சமூக வலைத்தளங்கள் ஊடாக தொடர்பை பேணும் வன்முறை கும்பல்கள்




சமூக வலைத்தளங்கள் ஊடாக தொடர்புகளை ஏற்படுத்தி வன்முறைகளில் ஈடுபடும் கும்பல்களை இனம் கண்டு அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

வவுனியா பூவசரங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தட்டான்குளம் , செட்டிக்குளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் குழுவொன்று " கெத்து பசங்க" எனும் பெயரில் வட்ஸ் அப் குழு ஒன்றின் ஊடாக தொடர்புகளை பேணி வன்முறை சம்பவம் ஒன்றில் ஈடுபடவிருந்த சமயம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , நான்கு இளைஞர்களை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

இந்நிலையில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் ஏனைய பகுதிகளில் முகநூல் , வட்ஸ் அப் , டிக் டொக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாக ஒன்றிணைந்து தமக்குள் தொடர்புகளை பேணி வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்ற சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் அது தொடர்பில் விசேட நடவடிக்கைகளை போலீசார் முன்னெடுத்துள்ளனர். 

கடந்த வாரம் யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி பகுதியில் வன்முறைக்கு இளைஞர் குழுவொன்று தயாரான நிலையில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்கு பொலிஸார் விரைந்த போது, பொலிசாரை கண்டதும் வன்முறை கும்பல் அங்கிருந்து தப்பி சென்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments