மின்சாரசபை விற்பனைக்கல்ல!



இலங்கை மின்சார சபையையோ அல்லது அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களையோ தனியார்மயமாக்குவது கிடையாது என இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு குழுவின் உறுப்பினர் கலாநிதி சுசந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

மின்சக்தி அமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

“மறுசீரமைப்பு இலங்கை மின்சார சபையின் செயற்பாடுகளை பிரிக்கும் மற்றும் அந்த செயற்பாடுகளை செயற்படுத்த சுயாதீன நிறுவனங்களை நிறுவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, மின்சார உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகம் ஆகியவற்றிற்கான சுயாதீனமான செயற்பாடுகளை மேற்கொள்ளும் நிறுவனங்களாக மாற்றப்பட உள்ளது. மின்சார சபையை ஒரே நிறுவனமாக வைத்துக்கொண்டு இந்த மறுசீரமைப்பைச் செய்ய முடியாது. எனவே, இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட்டுள்ள மேற்படி செயற்பாடுகள் பிரிக்கப்பட்டு சுயாதீன நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டும். அதாவது அந்த அமைப்புகளை நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களாக மாற்ற வேண்டும்’’ எனவும் அவர் தெரிவித்தார்.


“ஒரு நிறுவனமாக பதிவு செய்தல் மற்றும் தனியார்மயமாக்கல் இரண்டும் முற்றிலும் வேறுபட்ட விடயங்கள்,” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


ஒரு நிறுவனமாக ஸ்தாபிப்பதால், சபையின் வளங்கள் அல்லது செயற்பாடுகளின் அதிகாரத்தின் உரிமையை அரசாங்கத்திடம் இருந்து அகற்ற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.


இந்த மறுசீரமைப்பு முன்மொழிவில், அங்குள்ள செயற்பாடுகளை எவ்வாறு பிரித்து அவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான சுயாதீன நிறுவனங்களாக நிறுவுவது என்பது குறித்த திட்டம் மாத்திரமே முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்காக தற்போதுள்ள சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments