ETF, EPF கட்டாத நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்


20 வருடங்களாக வேலை செய்யும் ஊழியர்களுக்கு அந்த கால பகுதியில் அவர்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை சம்பளத்தின் பிரகாரமே ETF, EPF  நிறுவனங்களால் கட்டப்படுகிறது. அதனால் ஊழியர்கள் பல பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர். இவ்வாறான தவறுகள் திருத்தப்பட வேண்டும் என வடமாகாண தனியார் ஊழியர் சங்கத்தின் தலைவர் சாமிநாதன் சிவகுமார் தெரிவித்துள்ளார். 

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் 80 வீதமான ஊழியர்கள் தமது வரவை நிறுவனங்களில்  பதிவு செய்வதில்லை. எனவே வருகின்ற புதிய ஆண்டில் இருந்து அவர்களுக்கான நாளேடு காட்சிப்படுத்துவதுடன் ETF, EPF  இலக்கமும் நாளேட்டில் காட்சிப்படுத்தப்பட  வேண்டும்.

அதேவேளை அடிப்படை சம்பளம் 17 ஆயிரம் ரூபாயாக இருக்கின்ற போதிலும் பல இடங்களில் அத்தனையும் விட குறைவான சம்பளம் வழங்குகின்றனர். 

குறிப்பாக புடவைக்கடைகளில் வேலை செய்யும் பெண் பிள்ளைகளுக்கு 08 ஆயிரம் சம்பளம் கூட வழங்குகின்றார்கள். அந்த பிள்ளைகள் தமது பொருளாதார நிலைமைகள் கருதி மிக குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்து வருகின்றனர். 

இவ்வாறான செயற்பாடுகளை நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் . மீறும் நிறுவனங்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார் 

No comments