பிரான்சில் நடைபெற்ற கேணல் பரிதி அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

பிரான்சில் மிகவும் சிறப்பாக இடம்பெற்ற கேணல் பரிதி அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தலும் மாணவர்கள் மதிப்பளித்தலும்! பிரான்சில் கேணல்

பரிதி அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு சுமந்த நிகழ்வும் புலம்பெயர் மண்ணில் உயர்கல்வியை முடித்து பட்டம்பெற்ற மாணவ மாணவியர் மதிப்பளிப்பு நிகழ்வும் புளோமெனில் பகுதியில் கடந்த (13.11.2022) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 14.00 மணிக்கு இடம்பெற்றது.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழ்ப் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு துணைப் பொறுப்பாளர் திரு.சசி அவர்கள் ஏற்றிவைக்க, கேணல் பருதி அவர்களின் திரு உருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை கேணல் பருதி அவர்களின் தாயார் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.

தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன.

கலைநிகழ்வுகளாக சேர்ஜி; தமிழ்ச்சோலை, கவின் கலைக்கல்லூரி, ஆதிபராசக்தி கலைப்பள்ளி, செவ்றோன் தமிழ்ச்சோலை, திறான்சி தமிழ்ச்சோலை, புளொமெனில் தமிழ்ச்சோலை ஆகிய பள்ளி மாணவியர் வழங்கிய எழுச்சி நடனங்கள், பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பைச்சேர்ந்த திருமதி யசோதா எட்வேட் லூயிஸ் அவர்களின் பரிதி அண்ணா நினைவு சுமந்த கவிதை மற்றும் பிரான்சு தமிழர் கலைபண்பாட்டக்கழகப் பாடகர்களின் கேணல் பரிதி அவர்கள் நினைவு சுமந்த பாடல்களும் இடம்பெற்றிருந்தன.

நினைவுரையினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர், திரு.பாலசுந்தரம் அவர்களும் கேணல் பரிதி அவர்களின் வரலாறு அடங்கிய உரையினை திரு.வரன் அவர்களும் ஆற்றியிரந்தனர்.

கேணல் பரிதி அவர்கள் நினைவாக இடம்பெற்ற உதைபந்தாட்டப்போட்டியில் வெற்றிபெற்ற விரர்களுக்கான பரிசளிப்பு இடம்பெற்றது.

உணர்வுபூர்வமாக இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரான்சு மண்ணில் உயர்கல்வியை முடித்து பல்வேறு துறைகளிலும் பட்டம்பெற்ற 15 தமிழ் மாணவ மாணவியர் மதிப்பளிப்புச் செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கான மதிப்பளித்தலை கேணல் பருதி அவர்களின் தாயார் வழங்கியிருந்தார்.

ஜெயதேவன் பிரியங்கா, செல்ரன் பெர்னாண்டோ ஸ்ரெபானி, மனோகரன் தட்சாயினி, ஜெயசிங்கம் ஜெதுசா, நல்லையா அகல்யா, ஜெயக்குமார் சோதியா, ஜெயதேவன் நிதர்சினி, பிரபாகரன் பிரெமி, சீராளன் பலிசா, எட்வேட் லூயிஸ் வேர்ஜினியா, திலீப்குமார் சுபன், சிறிஸ்கந்தராஜா சாருஜா, வசந்தரூபன் துவாரகா, நந்தகுமார் அஞ.சலி, சிறிஸ்கந்தராஜா ஸ்ரெபான் ஆகிய மாணவ மாணவியரே அனைவரின் கரகோசத்துக்கு மத்தியில் மதிப்பளிப்புச் செய்யப்பட்டனர்.

இந்நிகழ்வில் நந்தகுமார் அஞ்சலி என்ற மாணவி தெரிவிக்கையில், பரிதி மாமா சிறுவயதில் என்னைப் பார்க்கும்போது, நீ நன்றாகப் படிக்கவேண்டும், வளர்ந்து பெரிய நிலைக்கு வரவேண்டும் என்று கூறுவார். அவருடைய ஆசையை நான் நிறைவேற்றியுள்ளேன். அதனை இந்த மேடையில் கூறும்போது மகிழ்ச்சியாக உள்ளது என்று உணர்வு பொங்கத் தெரிவித்தமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து ஓய்ந்ததும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வு நிறைவு கண்டது.




No comments