அடாத்தாக காணி பிடிப்பதை இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது - வேலன் சுவாமி


சிங்கள அரச பேரினவாதம் அடாவடியாக நீதிமன்றங்களின் உத்தரவுகளை மீறி மேலிடத்தில் வந்த உத்தரவு என்று சொல்லிக்கொண்டு அடாத்தாக காணிகளை பிடிப்பதை நாங்கள் இனிமேலும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது என சிவகுரு ஆதீனத்தின் முதல்வர் தவத்திரு வேலன் சுவாமி தெரிவித்துள்ளார்.

யாழ் . பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் வலி. வடக்கு காணி அபகரிப்புக்கு எதிராக இன்று போராட்டம் இடம்பெற்றிருந்தது. இதன்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்திலே எங்களுடைய காணிகள் , நிலங்கள் அபகரிக்கப்பட்டு வரும் செயற்பாடுகள் கடந்த 74 வருடங்களாக நடைபெற்றுவருகின்றது. இதற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

குறிப்பாக இன்று வலி. வடக்கிலே 2500 ஏக்கருக்கு மேற்பட்ட காணி இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளே இருக்கின்றன. எங்களுடைய மக்கள் தாங்கள் வாழ்வதற்கு இடம் இல்லாமல் துன்பப்பட்டுக்கொண்டு விவசாயம் செய்வதற்கு, பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்கு, கடல் வளங்களை பெற்றுக்கொள்வதற்கு வழி இல்லாமல் துன்பப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய எங்களது பூமியிலே வந்து சிங்கள, பௌத்த, அரச பேரினவாத அதாவது அரச இயந்திரம் இங்கு அடாவடியாக நீதிமன்றங்களின் உத்தரவுகளை மீறி மேலிடத்தில் வந்த உத்தரவு என்று சொல்லிக்கொண்டு அடாத்தாக காணிகளை பிடிப்பதை நாங்கள் இனிமேலும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது.

இளையோர் சமூகம் பொங்கி எழுந்தால் , மாணவர் எழுச்சி மிகப்பெரிய எழுச்சியாக இருக்கும். இதற்கான ஒரு ஆரம்பம் தான் இன்று நடைபெற்றிருக்கிறது. ஆகவே அனைத்து காணி அபகரிப்புக்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இல்லையேல் இது தொடருமாக இருந்தால் எங்களுடைய மாணவர்கள் பேரெழுச்சியாக வட, கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

இராணுவ, கடற்படை, விமான முகாம்கள் என்று அனைத்தும் முடக்கப்பட்டு எங்களுக்கான போராட்ட வடிவத்தை நாங்களே தீர்மானிக்கின்ற நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம். ஆகவே இந்த இடத்தில் உள்ள காணிகள் அனைத்தும் எங்களுக்கு வேண்டும். இதற்கு  எங்கள் ஆதரவையும் வழங்கி நிற்கின்றோம் .

எனவே இந்த சந்தர்ப்பத்தில் அனைவரையும் எங்களுடன் இணையுமாறும், தொடர்ந்து போராட்டங்களில் கலந்துகொள்ளுமாறு உங்களை வேண்டி நிற்கின்றோம். இந்தியா உட்பட அனைத்து சர்வதேசமும் இதிலே தலையிட்டு உடனடியாக காணி அபகரிப்புக்களை, வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தை கூறுபோடுகின்ற முயற்சியை நிறுத்த வேண்டும். வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தயக்கத்திலே சுயநிர்ணய அடிப்படையில் ஒரு சர்வஜன வாக்கெடுப்பினை நடாத்தப்படுவதன் ஊடாக அரசியல் தலை விதியினை நாங்களே தீர்மானிக்கின்றோம். இது தான் எங்களுடைய பிரதானமான வேண்டுகோளாக இருக்கின்றது என்றார்.

செய்தி: பு.கஜிந்தன்

No comments