கஞ்சா பிடிக்க இராணுவ சோதனை சாவடியாம்!



யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவது என்ற பெயரில் இராணுவத்தை வீதிகளில் இறக்க அரசு நகர்வுகளை ஆரம்பித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்றிலிருந்து ராணுவத்தினரால்  முக்கியமான இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து வீதியால் பயணிப்போரை  சோதனையிட உள்ளதாக யாழ்.கட்டளை தளபதி மேஜர்  ஜெனரல்  சந்தன விஜயசுந்தர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஹம்பாந்தோட்டை கடற்பிராந்தியத்தில், இலங்கை கடற்படை மற்றும் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 300 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய 02 மீன்பிடிப் படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட ஹெரோயின் மதிப்பு சுமார் 600 கோடி ரூபாய் என்று தெரியவந்துள்ளது.

எனினும் அவை பற்றி ஏதும் பிரஸ்தாபிக்கவோ அங்கு படையினரது சோதனை சாவடிகளை முன்னெடுப்பது தொடர்பில் நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

ஆனால் யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண ஆளுநரின் பரிந்துரைக்கு அமைய இன்று முதல் யாழ்ப்பாணத்தின் முக்கியமான இடங்களில் ராணுவத்தினரால் சோதனை சாவடி அமைக்கப்பட்டு போதை பொருள் விநியோகம் மற்றும் போதை பொருள் பாவிப்போர் கைது செய்யப்பட உள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் போதை பொருள் பாவிப்போர் தொடர்பில் ஏதாவது தகவல்கள் தெரிந்தால் பொதுமக்கள் அருகில் உள்ள ராணுவ முகாம்களிற்கு   தகவல்களை தெரிவிக்கவும் கோரப்பட்டுள்ளது.

அத்துடன் இராணுவத்தினரால்  யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும் .எனவே பொதுமக்கள் இந்த விடயத்திற்கு நமக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் யாழ்.மாவட்ட கட்டளை தளபதி மேஜர்  ஜெனரல்  சந்தன விஜயசுந்தர என்பவர் தெரிவித்துள்ளார்.


No comments