ஜெனீவா செல்ல விருப்பமில்லை:மனோ!



எனக்கு நமது பிரச்சனைகளை எடுத்து கொண்டு சென்னைக்கு சென்று, நியூயோர்க்குக்கு சென்று, ஜெனீவாவுக்கு என்று பேச விருப்பம் இல்லை. ஆனால், என்னை அந்த இடத்துக்கு தள்ளி விட வேண்டாம் என அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்க விரும்புகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்.பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டில் நலிவடைந்த பிரிவினர் தொடர்பில் நேற்று (8) தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர திசாநாயக்க, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் ஆகியோர் கூட்டாக கொண்டு வந்த கவன ஈர்ப்பு பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றிய தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

இந்நாட்டில் நாம் 1958, 1977, 1983 கால கட்டங்களில் இனவாத கலவரங்களை பார்த்துள்ளோம். 1971, 1988, ஆண்டுகளில் தெற்கில் ஆயுத போரை பார்த்துள்ளோம். 2004ல் சுனாமி அழிவை பார்த்துள்ளோம்.  அதன்பின் 30 ஆண்டுகால போருக்கு முகம் கொடுத்துள்ளோம். எதுவாக இருந்தாலும், எக்காலத்திலும் இன்றைய நிலைமையை போல் நமது மக்கள் நெருக்கடியை சந்திக்கவில்லை என எண்ணுகிறேன். எக்காலத்திலும் மக்கள்  எப்படியாவது மூன்று வேளையும் சாப்பிட்டார்கள். பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தபடி வாழ்ந்தார்கள். இந்த காலத்தில்தான் இப்படி மிகவும் மோசமான நெருக்கடிக்கு முகம் கொடுக்கிறார்கள்.

ஐ.நாவின் நவீன அடிமைத்துவத்துக்கான அறிக்கையாளர் டோமாயா ஒபகாடா, சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.நா மனித உரிமை ஆணையக அவைக்கு அறிக்கை சமர்பித்துள்ளார்.  அவர் என்ன கூறுகிறார்? இலங்கையில் பெருந்தோட்டங்களை காணப்படும் ஒடுக்கு முறைக்கு பின்னால் இனத்துவ காரணம் இருக்கிறது என கூறுகிறார்.  பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கும் துன்பங்களுக்கு காரணமாக அவர்கள் தொழிலாளர் என்பதை விட, அவர்கள் சிறுபான்மை தமிழர்கள் என்ற காரணமும் உள்ளது என அவர் கூறுகிறார். இது ஒரு பாரதூரமான குற்றச்சாட்டு.  

எனக்கு நமது பிரச்சனைகளை எடுத்து கொண்டு, சென்னைக்கு சென்று, நியூயோர்க்குக்கு சென்று, ஜெனீவாவுக்கு என்று பேச விருப்பம் இல்லை. ஆனால், என்னை அந்த இடத்துக்கு தள்ளி விட வேண்டாம் என அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்க விரும்புகிறேன்.  நாம் அநேகமான பாரபட்சங்களுக்கு முகம் கொடுக்கின்றோம். இங்கே கல்வி அமைச்சர் இருப்பதால் ஒன்றை அவர் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.

No comments