பதவியேற்று 45 நாளில் பதவி விலகினார் பிரித்தானியப் பிரதமர்!
பிரதமர் லிஸ் டிரஸ் இன்று தனது பதவியை திடீரென பதவி விலகியுள்ளார். என்னை தேர்வு செய்ததற்கான இலக்கை அடைய முடியாததால் பதவி விலகுகிறேன் என லிஸ் டிரஸ் கூறியிருக்கிறார்.
பதவியேற்ற 45 நாட்களில் தனது பதவியை ராஜினாமா செய்ததால், இங்கிலாந்தின் வரலாற்றில் மிகக்குறுகிய காலம் பதவியில் இருந்த பிரதமர் என்ற பெயரை லிஸ் டிரஸ் பெற்றுள்ளார்.
இன்னும் ஒரு வாரத்தில் அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என லிஸ் டிரஸ் தெரிவித்துள்ளார். இன்னும் ஒரு வாரத்தில் பிரதமர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்ட ரிஷி சுனக்கிற்கு தற்போது 55% வெற்றி வாய்ப்பு இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
அதே சமயம் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனும் தேர்தலில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த ஜெரேமி ஹண்ட், தான் தேர்தலில் போடியிடப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
இவர்கள் தவிர கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த பென்னி மார்டண்ட், இங்கிலாந்தின் பாதுகாப்புத்துறை செயலாளர் பென் வாலேஸ் ஆகியோரும் பிரதமர் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது. எனவே வேட்பாளர்கள் தொடர்பான அறிவிப்பு வெளியான பிறகே, வெற்றி வாய்ப்புகளை கணிக்கும் சாத்தியங்கள் ஏற்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
லிஸ் டிரஸ் கடந்த செப்டம்பர் 6 ஆம் திகதி பிரதமராகப் பதவியேற்றார். இதன் பிறகு நடைபெற்ற மினி பட்ஜெட் கூட்டத்தொடரில், லிஸ் டிரஸ் பல்வேறு வரி குறைப்பு திட்டங்களை வெளியிட்டார். ஆனால் அந்த திட்டங்களுக்கு அவரது சொந்தக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அதிருப்தி தெரிவித்தனர்.
இதையடுத்து நிதி அமைச்சர் (சான்ஸ்சிலர்) குவாஸி குவார்டங்கை பிரதமர் லிஸ் டிரஸ் அதிரடியாக பதவிநீக்கம் செய்தார். அவருக்கு பதிலாக ஜெரேமி ஹன்ட் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து இந்திய வம்சாவளி பெண்ணான சுவெல்லா பிரேவர்மென் உள்துறைச் செயலர் பதவியில் நேற்று முன்தினம் பதவி விலகினார். இதனால் இங்கிலாந்து அமைச்சரவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பிரதமர் லிஸ் பதவி விலகினார்.
Post a Comment